இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அந்த அணியை 110 ரன்களுக்கு சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று இந்தியா அசத்தியது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் பந்துவீச்சில் அசத்திய இந்தியா அந்த அணி நிர்ணயித்த 247 ரன்கள் இலக்கை பேட்டிங்கில் துரத்த முடியாமல் 100 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு மான்செஸ்டரில் துவங்குகிறது.
வெல்லப்போவது யார்:
இங்கிலாந்து: இங்கிலாந்தை பொறுத்தவரை புதிய கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் ஏற்கனவே டி20 தொடரை இழந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வியை சந்தித்து 2-வது போட்டியில் கொதித்தெழுந்துள்ளது. எனவே அந்த வெற்றியால் புத்துணர்ச்சி அடைந்துள்ள அந்த அணி 3-வது போட்டியில் வென்று டி20 தொடரில் தோல்வியை கொடுத்த இந்தியாவை பழிதீர்க்க தயாராகியுள்ளது. இருப்பினும் 2-வது போட்டியிலும் அந்த அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்த நிலையில் பந்துவீச்சாளர்களால் வென்ற இங்கிலாந்து இப்போட்டியில் 2 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றியை சுவைக்க முடியும்.
இந்தியா: மறுபுறம் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் நடந்த டி20 தொடரில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்தது.
அதேபோல் முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் அனலான பந்துவீச்சால் வென்ற இந்தியா 2-வது போட்டியில் சுமாரான பேட்டிங்கால் வெற்றியை நழுவ விட்டது. எனவே இப்போட்டியில் வென்று இந்த சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டியுள்ளது.
மான்செஸ்டர் மைதானம்:
இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் இருக்கும் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1857இல் தோற்றுவிக்கப்பட்டு 1884 முதல் 100 வருடங்களுக்கும் மேலாக ஏராளமான சர்வதேச போட்டிகளை நடந்து வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் 1972 முதல் ஒருநாள் போட்டிகளில் நடைபெற்று வருகின்றன.
1. 26000 ரசிகர்கள் பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் வரலாற்றில் 55 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 26 போட்டிகளிலும் சேசிங் செய்த அணிகள் 28 போட்டிகளிலும் வென்றனர். 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
2. இம்மைதானத்தில் வரலாற்றில் 42 போட்டிகளில் பங்கேற்ற இங்கிலாந்து 27 வெற்றிகளையும் 14 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
3. இந்த மைதானத்தில் இந்தியா வரலாற்றில் 11 போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்த இந்தியா 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது என்பதால் இம்முறையும் கவனத்துடன் விளையாட வேண்டும்.
புள்ளிவிவரம்:
1. இந்த மைதானத்தில் 159 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா அதிக சதங்கள் (1) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (140, பாகிஸ்தானுக்கும் எதிராக) அடித்த இந்திய பேட்ஸ்மேனாகவும் முதலிடத்தில் உள்ளார்.
2. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக ரோஜர் பின்னி மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் தலா 7 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இங்கு சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் : 5/27.
3. இம்மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 336/5, அதேபோல் குறைந்தபட்ச ஸ்கோர் : 191 ஆல்-அவுட்
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் மான்செஸ்டர் நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்று தெரிவிக்கும் அந்நாட்டு வானிலை மையம் லேசான மேகமூட்டம் நிலவும் என அறிவித்துள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும்.
பிட்ச் ரிப்போர்ட்:
ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் என்பதால் போட்டி முழுவதிலும் திறமையை வெளிப்படுத்தும் பேட்ஸ்மென்கள் நல்ல ரன்களை குவிக்க முடியும். ஆனாலும் போட்டி நாளன்று மேகமூட்டம் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால் ஸ்விங் செய்யும் திறமையை பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல விக்கெட்டுகளை எடுக்க முடியும். எனவே ஆரம்ப கட்ட ஓவர்களில் நிதானத்தை வெளிப்படுத்தி கால சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் பேட்டிங் செய்தால் மட்டுமே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க முடியும்.
வழக்கம் போல மிடில் ஓவர்களில் தரமான சுழல் பந்து வீச்சாளர்களும் ஆதிக்கத்தை செலுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம். இங்கு வரலாற்றில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் கோர் 240 ஆகும். மேலும் இங்கு இதற்கு முன் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



