இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த பெரிய வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை இம்முறை டி20 தொடரில் அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைக்கும் அளவுக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா பதிலடி கொடுத்து பழிதீர்த்துள்ளது.
இதையடுத்து இந்தத் தொடரின் கடைசி போட்டி ஜூலை ஜூலை 10-ஆம் தேதியன்று இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் இருக்கும் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்குகிறது. உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கனின் ஓய்வுக்கு பின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையில் இந்தத் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய இங்கிலாந்து எதிர்பாராத வகையில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தங்களது பயணத்தை தோல்வியுடன் துவக்கியுள்ளது.
இருப்பினும் சொந்த மண்ணில் வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க இந்த கடைசி போட்டியில் வெல்ல கடைசி முயற்சியாக அந்த அணியின் அதிரடி வீரர்கள் போராட உள்ளனர். மறுபுறம் ரோகித் சர்மா வந்ததும் புத்துணர்ச்சியடைந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு மாஸ் காட்டியுள்ள இந்தியா கடைசி போட்டியிலும் கருணை காட்டாமல் அபாரமாக செயல்பட்டு 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வெல்ல போராட உள்ளது.
ட்ரெண்ட் பிரிட்ஜ்:
சரி இப்போட்டியை முன்னிட்டு போட்டி நடைபெறும் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தை பற்றி பார்ப்போம். கடந்த 1841இல் தோற்றுவிக்கப்பட்டு சுமார் 32,000 ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் கடந்த 1899 முதல் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
1. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் கடந்த 2009 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 12 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன, 5 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன.
2. இம்மைதானத்தில் இங்கிலாந்து வரலாற்றில் 3 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பதிவு செய்துள்ளது. இதே மைதானத்தில் இந்தியாவும் வரலாற்றில் பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது.
3. அந்த 3 போட்டிகளுமே கடந்த 2009 ஐசிசி டி20 உலக கோப்பையில் நடைபெற்றதாகும். இம்மைதானத்தில் 2009இல் வரலாற்றில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா முதலில் அற்புதமாக பேட்டிங் செய்து கம்பீர் 50 (48) யுவராஜ் சிங் 41 (18) ஆகியோரின் அதிரடியில் 185/5 ரன்கள் குவித்து பின்னர் பிரக்யான் ஓஜா 4 விக்கெட்டுகள் எடுக்க 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. அதேபோல் அயர்லாந்துக்கு எதிராக நடந்த மற்றொரு போட்டியில் ஜாம்பவான் ஜாஹீர் கான் 4 விக்கெட்டுகள் எடுக்க 112 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3-வது போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் 63 ரன்கள் எடுக்க அதை பேட்டிங்கில் துரத்த முடியாமல் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இம்மைதானத்தில் முதல் முறையாக இம்முறை இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
புள்ளிவிவரம்:
1. இம்மைதானத்தில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர்: 180/5, வங்கதேசத்துக்கு எதிராக, 2009. குறைந்தபட்ச ஸ்கோர் 118/8, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2009.
2. இம்மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா: 117 ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்கள்: பிரக்யான் ஓஜா மற்றும் ஜாகீர்கான் தலா 6 விக்கெட்டுகள்.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாட்டிங்காம் நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்ற நிலையில் லேசான மேக மூட்டத்துடன் நல்ல வெயில் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம் லார்ட்ஸ் போன்ற வழக்கமான இங்கிலாந்து மைதானங்களை போல ஃப்ளாட்டாக இருக்கும் என்பதால் பேட்டிங்க்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். பிளாட்டாக இருந்தாலுமே இம்மைதானம் சற்று மெதுவாகவே காணப்படுவதால் வரலாற்றில் இங்கே சுழல் பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதேபோல் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்களை எடுக்கலாம்.
மொத்தத்தில் இம்மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்குமே சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் வரலாற்றில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 161 ஆகும். மேலும் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிகமாக இங்கு வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து 170 – 200 ரன்களை எடுத்தால் வெற்றி கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.



