இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான வலுவான இங்கிலாந்தை சமாளிக்க இம்முறை கேப்டன் ரோகித் சர்மா குணமடைந்து திரும்பினார். அந்த நிலைமையில் ஜூலை 7-ஆம் தேதியன்று சௌதம்ப்டன் நகரில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அர்ஷிதீப் சிங் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்தியா அதிரடி:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 5 பவுண்டரி பறக்கவிட்ட கேப்டன் ரோகித் சர்மா 24 (14) ரன்களை அதிரடியாக எடுத்தாலும் திடீரென ஆட்டமிழந்து ஏமாற்ற அவருடன் தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 8 (10) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 46/2 என சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு மறுபுறம் 3 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிய தீபக் ஹூடாவும் 33 (17) ரன்களில் ஆட்டமிழக்க அவரைப்போலவே அடுத்ததாக களமிறங்கி 4 பவுண்டரி 2 சிக்சர்கள் தெறிக்கவிட்ட நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 39 (19) ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் 11.4 ஓவரில் 126/4 என இந்தியா நல்ல தொடக்கத்தை பெற்றது. அப்போது களமிறங்கிய அக்சர் படேல் அதிரடியாக 3 பவுண்டரியுடன் 17 (11) ரன்களில் அவுட்டாக அவருடன் மிடில் ஆர்டரில் மிரட்டிய ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக அரைசதம் அடித்து 51 (33) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் 2 பவுண்டரி பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் 11 (7) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 198/8 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மொய்ன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பாண்டியா மாஸ்:
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் புதிய கேப்டன் பட்லரை அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதைவிட அடுத்ததாக களமிறங்கி 4 பவுண்டரிகளை பறக்க விட்டு மிரட்டலை கொடுத்த டேவிட் மாலனை 21 (14) ரன்களில் கிளீன் போல்டாக்கிய ஹர்திக் பாண்டியா சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டலான சிக்சர்களை பறக்கவிட்டு எதிரணிகளை பந்தாடிய லியம் லிவிங்ஸ்டனை டக் அவுட் செய்து மிரட்டலாக பந்துவீசினார்.
அதோடு நிற்காத அவர் மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராயை 4 (16) ரன்களில் காலி செய்ததால் 33/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே திணறியது. அதை சரி செய்ய மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த மொய்ன் அலி – ஹரி ப்ரூக் 5-வது விக்கெட்டுக்கு முக்கியமான 61 பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்க போராடினர்.
ஆனால் அவர்களை அதிக நேரம் செட்டாக விடாமல் 12, 14-வது ஓவர்களை வீசிய சுழல் பந்துவீச்சாளர் சஹால் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (23) ரன்களில் ப்ரூக்கையும் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (20) ரன்களில் மிரட்டிய மொயின் அலியையும் அடுத்தடுத்து அவுட் செய்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார். அதனால் 100/6 என தடுமாறிய இங்கிலாந்துக்கு கடைசி நேரத்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26* (17) ரன்கள் குவித்து கிறிஸ் ஜோர்டான் போராடினாலும் சாம் கரண் 4 (4), டைமல் மில்ஸ் 7 (8), ரிலே டாப்லி 9 (8) என கடைசியில் வந்த பேட்ஸ்மென்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி சென்றார்கள்.
இந்தியா பதிலடி:
அதனால் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 148 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும் சஹால் மற்றும் அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற அசதியுள்ளது.
அதைவிட தாம் இல்லாத சமயத்தில் பும்ரா தலைமையிலான இந்தியாவை டெஸ்ட் போட்டியில் மண்ணைக் கவ்வ வைத்த இங்கிலாந்துக்கு கேப்டனாக திரும்பிய முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா தக்க பதிலடி கொடுத்து இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளார். முதலில் பேட்டிங்கில் இங்கிலாந்தின் பந்துவீச்சில் முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் இடையிடையே அவுட்டானாலும் அதிரடியை கைவிடாமல் 20, 30 என கணிசமான ரன்களை எடுத்தனர். அதை முக்கிய நேரத்தில் களமிறங்கி அரைசதம் அடித்து காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா 198 என்ற பெரிய ஸ்கோராக மாற்ற உதவினார்.
அதேபோல் இங்கிலாந்தின் பலமே பட்லர், ராய், மாலன், லிவிங்ஸ்டன் என அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்பதை உணர்ந்த இந்தியா துல்லியமாகவும் அதிரடியாகவும் பந்துவீசி முதல் 7 ஓவரிலேயே அந்த நால்வரையும் காலி செய்து இங்கிலாந்தை ஆரம்பத்திலேயே உடைத்தது.
குறிப்பாக சமீப காலங்களில் முழுமையான 4 ஓவர்களை பந்துவீச தடுமாறிய ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்ட அவருடன் சஹால், புவனேஸ்வர் குமார் மற்றும் அறிமுகப் போட்டியில் பொறுப்புடன் பந்துவீசிய அர்ஷிதீப் சிங் ஆகியோரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை மொத்தமாக சாய்த்தனர். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த வெற்றிக்கு ஆல்-ரவுண்டராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.



