தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் களமிறங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் துவங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் காயமடைந்ததால் ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுதுணையாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்தியதுடன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அட்டகாசமாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர்களுடன் 3 வருடங்கள் கழித்து மாஸ் கம் பேக் கொடுத்துள்ள தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், புவேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களுடன் ஐபிஎல் தொடரில் அனைவரின் பாராட்டுகளையும் அள்ளிய உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் ஆகிய இளம் வீரர்கள் முதல் முறையாக தேர்வாகியுள்ளனர். எனவே ரிஷப் பண்ட் தலைமையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியினர் போராட உள்ளனர்.
சவாலான தென்ஆப்பிரிக்கா:
அதேபோல் தெம்பா பவுமா தலைமையில் இதே ஐபிஎல் தொடரில் குஜராத்துக்காக பினிஷெராக மிரட்டிய டேவிட் மில்லருடன் குயின்டன் டி காக், ககிசோ ரபாடா போன்ற தேவையான தரமான வீரர்களுடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் கடந்த பல வருடங்களாக இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளனர். எனவே அந்த புத்துணர்ச்சியுடன் இந்த தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல அந்த அணியும் போராட உள்ளது.
அதைவிட வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெறுவதால் அதற்கு தேவையான வீரர்களை இந்த தொடரில் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக வெற்றிக்காகவும் டி20 உலகக் கோப்பை இடத்திற்காகவும் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று நம்பலாம்.
சரியான வெயில்:
முன்னதாக இந்த தொடரானது இந்திய தலைநகர் டெல்லியில் துவங்கி கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெற்று பெங்களூருவில் வரும் ஜூன் 19-ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியினர் கடந்த ஜூன் 4-ஆம் தேதியே முதல் போட்டி நடைபெறும் டெல்லிக்கு வந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்தியாவில் தற்போது கோடை காலம் முடிவடையும் தருணம் என்பதால் பகல் நேரங்களில் கடுமையான வெயில் காணப்படுகிறது. குறிப்பாக முதல் போட்டி நடைபெறும் டெல்லியில் உச்சபட்சமாக 43 – 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் அடிப்பதால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது.
அதற்கு ஈடு கொடுக்க முடியாத தென்ஆப்பிரிக்க வீரர்கள் அனலில் தவிப்பதாக அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளையாக அனைத்துப் போட்டிகளும் இரவு நேரத்தில் நடப்பது தாங்கக் கூடியதாகும். சொல்லப் போனால் அதன் காரணமாக வழக்கமாக பகல் நேரங்களில் பியர் குடிக்கும் எங்களது வீரர்கள் தற்போது அதிகளவு தண்ணீரை அருந்துகின்றனர்”
“முடிந்த அளவு புத்துணர்ச்சியாக இருக்க முயற்சிக்கின்றனர். எங்களது நாட்டில் இந்த இந்த அனுபவத்தை பெற்றதில்லை. அதனால் முடிந்த அளவுக்கு வெப்பத்தை சமாளித்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் விளையாடுமாறு எங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். ஏனெனில் வெப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் நாட்டுக்காக போட்டியில் வென்றாக வேண்டும்” என்று கூறினார். அதேபோல் இந்தியாவில் எப்படி வாழ்கிறார்கள் என்பது போல் தென் ஆப்பிரிக்கா சுழல்பந்து வீச்சாளர் தப்ரிஸ் சம்சி தனது டுவிட்டரில் வெயிலை பற்றி பதிவிட்டுள்ளார்.
சிறப்பு ஏற்பாடு:
பொதுவாக கேப் டவுன் போன்ற தென் ஆப்பிரிக்க நகரங்களில் தற்சமயத்தில் வெறும் 18 டிகிரி செல்சியஸ் என்ற இதமான சூழ்நிலை நிலவுகிறது. அதில் பெரும்பாலும் வாழ்ந்து விளையாடி பழகிய தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய வெப்பம் சற்று அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இருப்பினும் இந்த வெப்பத்தை சமாளிப்பதற்காக போட்டியின் போது 10 ஒவர்களுக்கு இடையே ட்ரிங்க்ஸ் இடைவெளிக்கு பிசிசிஐ சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.



