10000 ரன்கள் அடிக்க ஆசையா இருந்தேன் ! ஆனா திடீர்னு நீக்கிட்டாங்க, கும்ப்ளே காப்பாற்றினார் – இந்திய ஜாம்பவானின் ஆதங்கம்

Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் டெல்லியைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர இந்திய வீரர் வீரேந்திர சேவாக் அதிரடியாக விளையாடி அனைவரையும் கவர்ந்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 – 200 பந்துகளை சந்தித்து சதம் அடிக்கும் சச்சின் டெண்டுல்கர் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் பத்தோடு பதினொன்றாக அல்லாமல் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க நினைத்த சேவாக் அதிரடி எனும் ஆயுதத்தை களமிறங்கிய முதல் நாளிலிருந்து ஓய்வு பெறும் வரை கையிலெடுத்தவர்.

Sehwag

- Advertisement -

சொல்லப்போனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி என்றால் என்ன அந்த வார்த்தைக்கான இலக்கணம் என்னவென்று இந்திய ரசிகர்களுக்கு காட்டியவர் சேவாக் என்றால் மிகையாகாது. டி20 கிரிக்கெட் வருவதற்கு முன்பாகவே டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடி சரவெடியாக பேட்டிங்கை கையாண்ட அவர் ஒரே நாளில் இரட்டை சதமடித்து 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் ரசிகர்களை விரும்பி பார்க்க வைத்தவர்.

அதிரடி சேவாக்:
சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக கடந்த 2001இல் அறிமுகமான அவர் அந்த முதல் போட்டியிலேயே சதமடித்து மிரட்டினார். அத்துடன் கவாஸ்கர், சச்சின் போன்ற மகத்தான பேட்ஸ்மேன்களால் கூட முடியாத 300 என்ற முச்சதத்தை 2 முறை அசால்டாக அடித்து காட்டிய சேவாக் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்தியராக இன்றும் சாதனை படைத்துள்ளார். அதன் வாயிலாக 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை தொடக்க வீரராக உருவெடுத்த அவர் துணை கேப்டனாகவும் முன்னேறினார்.

sehwag

இருப்பினும் 2007 வாக்கில் பார்ம் இழந்த அவரை இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. குறிப்பாக ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தபோது 52-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் அதன்பின் நீக்கப்பட்டு சுமார் ஒரு வருடங்களாக இந்தியாவுக்கு விளையாடாமல் இருந்தார். அந்த சமயத்தில் ரஞ்சி கோப்பையில் விளையாடிய அவர் 5 இன்னிங்சில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டதால் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்று விடலாம் என்று கருதினார்.

- Advertisement -

இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டதால் அந்த முடிவை தள்ளிப் போட்டார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் 2007 டிசம்பரில் மற்றொரு தொடக்க வீரர் கௌதம் கம்பீர் காயமடைந்ததால் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அனில் கும்ப்ளே பரிந்துரையின் பெயரில் குழுவினர் தேர்வு செய்ததால் 53-வது போட்டியை 11 மாதங்கள் கழித்து அவர் விளையாடினார்.

Sehwag

10000 ரன்கள்:
இந்நிலையில் 2007 வாக்கில் அந்த ஒரு வருடம் தம்மை நீக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக 10000 டெஸ்ட் ரன்களை அடித்திருப்பேன் என்று வீரேந்திர சேவாக் தற்போது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றிய சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சிறப்பாக செயல்பட்டு வந்த எனக்கு திடீரென்று டெஸ்ட் அணியில் ஒருவராக இல்லாமல் போனது மிகப் பெரிய வேதனையைக் கொடுத்தது. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் இந்திய அணியில் நீக்கப்படாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக 10,000+ டெஸ்ட் ரன்களை அடித்திருப்பேன்” என்று கூறினார்.

- Advertisement -

காப்பாற்றிய கும்ப்ளே:
மேலும் அந்த சமயத்தில் அப்போதைய கேப்டன் அனில் கும்ப்ளே தம்மை காப்பாற்றியதாகவும் சேவாக் தெரிவித்தார். அதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்தால் அடுத்த போட்டியில் உன்னை தேர்வு செய்வேன் என்று அனில் கும்ப்ளே என்னிடம் கூறினார். அந்த வகையில் எனது வாழ்வில் அந்த 60 ரன்கள் மிகவும் கடினமானதாகும். அவர் என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே நான் விளையாடினேன். ஏனெனில் என்னை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்ற அவரை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைத்தேன். களத்தில் கவனமாக இருந்து எதிர்ப்புறம் பேட்டிங் செய்யும் போது அம்பயரிடம் பேச்சுக் கொடுத்து பாடல் பாடி அழுத்தத்தை தவிர்த்தேன். அதுபோன்ற ஆதரவுதான் ஒரு கேப்டனிடம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆரம்பத்தில் கங்குலி எனக்கு அந்த ஆதரவை கொடுத்தார். இறுதியில் கும்ப்ளே கொடுத்தார்” என்று கூறினார்.

Sehwag

அடிலெய்டு நகரில் நடைபெற்ற அப்போட்டியில் 63 ரன்கள் குவித்து கும்ப்ளே நம்பிக்கையை காப்பாற்றிய சேவாக் 2-வது இன்னிங்சில் 151 ரன்கள் குவித்து இந்தியா போட்டியை டிரா செய்ய உதவினார். மேலும் 8503 ரன்களைக் குவித்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 5-வது இந்திய பேட்ஸ்மேனாக பெருமை பெற்றுள்ளார்.

அந்த வாய்ப்பை கச்சிதமாகப் பிடித்த அவர் அதன்பின் 2008இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் முச்சதம் விளாசி 319 ரன்களும் 2010இல் இலங்கைக்கு எதிராக 293 ரன்களும் அதன்பின் நியூசிலாந்துக்கு எதிராக ஒரே தொடரில் 165, 109 என அடுத்தடுத்து சதங்களை அடித்து ரன் மழை பொழிந்தால் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஐசிசி தரவரிசையில் முன்னேறி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement