வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் துவங்கியது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா களமிறங்கும் இந்த 1000வது போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுகமாக வாய்ப்பு பெற்றார்.

இதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே இந்தியாவின் அதிரடியான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் விக்கெட்டுகளை இழந்து வந்தது. குறிப்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்களான சஹால் மற்றும் வாசிங்டன் சுந்தர் கூட்டணி பந்து வீச துவங்கியதுமே வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களை பதம் பார்த்தனர்.
177 ரன்கள் இலக்கு:
அந்த அணியின் ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரான் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் கிரன் பொல்லார்ட் டக் அவுட்டாகி பெரிய அதிர்ச்சி கொடுத்தார். அதில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீட்க போராடிய ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் சொதப்பியதால் அண்ட அணி வெறும் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதை அடுத்து 177 என்ற எளிய இலக்கை துரத்திய இந்தியாவிற்கு தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் குவித்து அபார தொடக்கம் கொடுத்தனர். இதில் இஷான் கிசான் 28 ரன்களில் அவுட்டான போதிலும் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி மீண்டும் ரசிகர்களை ஏமாற்றினார்.
இந்தியா வெற்றி:
அடுத்து வந்த ரிஷப் பண்ட் 11 ரன்களில் அவுட்டானதால் திடீரென இந்தியா 116/4 என தடுமாறியது. அப்போது களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 34* ரன்களும் மற்றும் தீபக் ஹூடா 26* ரன்களும் எடுத்து பினிஷிங் செய்ததால் 28 ஓவர்களில் 178/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1 – 0* என முன்னிலை பெற்று இந்தியா அசத்தியுள்ளது. அத்துடன் தனது 1000வது ஒருநாள் போட்டியில் வெற்றியை பதிவு செய்த இந்தியா 2022ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டு உள்ளது.
ஏமாற்றிய கோலி சாதனை:
முன்னதாக இப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் முதல் முறையாக சாதாரண வீரராக விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 8 ரன்களில் அவுட்டான அவர் தனது 71வது சதத்தை தேடிய பயணத்தை மீண்டும் தொடர்கிறார்.

இந்நிலையில் இப்போட்டியில் 8 ரன்களை அடித்த “விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிவேகமாக 5000 ரன்களைக் குவித்த வீரர்” என்ற சச்சின் டெண்டுல்கரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 5000 ரன்களை விளாசிய வீரர்களின் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 96* இன்னிங்ஸ் (இந்திய மண்ணில்)
2. சச்சின் டெண்டுல்கர் : 121 இன்னிங்ஸ் (இந்திய மண்ணில்)
3. ரிக்கி பாண்டிங் : 130 இன்னிங்ஸ் (ஆஸ்திரேலிய மண்ணில்)
4. ஜேக் காலிஸ் : 138 இன்னிங்ஸ் (தென்ஆப்பிரிக்க மண்ணில்)
இதையும் படிங்க : 5 ஆண்டுகள் கழித்து கிடைத்த ஒருநாள் போட்டிக்கான வாய்ப்பு – வாஷிங்க்டன் சுந்தர் சாதித்தது என்ன?
இத்துடன் ஒருநாள் போட்டிகளில் இந்திய மண்ணில் 5000 ரன்களை குவித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர் : 6976 ரன்கள் (160 இன்னிங்ஸ்)
2. விராட் கோலி : 5002* ரன்கள் (96 இன்னிங்ஸ்)
3. எம்எஸ் தோனி : 4351 ரன்கள் (127 இன்னிங்ஸ்)



