கடந்த 2017 முதல் 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவிகளில் இருந்து படிப்படியாக விலகி தற்போது சாதாரண வீரராக விளையாட தொடங்கியுள்ளார். கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க அடிக்க முடியாமல் திணறி வரும் மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இனி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதற்காக கடந்த 2021 ஐசிசி டி20 உலகக்கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவரை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அதில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் அடுத்த ஒரு சில வாரங்களில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி விட்டதாக பலரும் நம்புகின்றனர்.
அதிர்ச்சி கொடுத்த கோலி:
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது யாருக்கும் பெரிய ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. ஏனென்றால் அவரால் ஒரு ஐசிசி உலகக்கோப்பையை வாங்கித்தர முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது.

ஆனால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவர் திடீரென விலகியது உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் 68 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி அதில் 40 வெற்றிகளை பெற்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் “இந்தியா மட்டுமின்றி ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டன்” என்ற சாதனை படைத்திருந்தார்.
ஷாக் கொடுத்துட்டாரு :
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்ததாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான கேப்டன் “ரிக்கி பாண்டிங்” கூறியுள்ளார். இதுபற்றி ஐசிசி இணையதளத்தில் அவர்,

“அந்த முடிவு எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்று தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின்போது விராட் கோலியிடம் பேசியிருந்தேன். அப்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து விலகி டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனத்துடன் கேப்டன்ஷிப் செய்ய உள்ளதாக ஆர்வத்துடன் தெரிவித்திருந்தார். அந்த பதவியை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் மன நிறைவுடன் செய்து வந்தார்.
மேலும் அவர் தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பல சரித்திர வெற்றிகளை பெற்றது என்பதால் அவரின் அந்த ராஜினாமா முடிவை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன்” என தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்பியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் வெற்றிக்கொடி:
விராட் கோலி தலைமையில் பல வெளிநாடுகளில் இந்தியா சரித்திரம் வாய்ந்த வெற்றிகளை பதிவு செய்தது. குறிப்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக்கவ்வ செய்து டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதுபற்றி ரிக்கி பாண்டிங் கூறுகையில்,
“ஆஸ்திரேலியாவின் கேப்டனாக நான் பொறுப்பேற்ற போது எங்கள் அணி அதற்கு முன்பே எந்த இடத்திலும் வெற்றி பெறக்கூடிய ஒரு அணியாக இருந்தது. ஆனால் விராட் கோலி பொறுப்பேற்ற போது இந்திய அணி சொந்த மண்ணில் மட்டுமே அதிக வெற்றிகளை பெற்று வந்தது. வெளிநாடுகளில் வெற்றிபெற முடியாமல் தவித்தது. இருப்பினும் அவர் தலைமையில் வெளிநாடுகளில் நிறைய வெற்றிகளை இந்தியா பெற்றது. அதற்காக விராட் கோலியும் இந்திய அணியும் பெருமைப்பட வேண்டும். கேப்டனாக விராட் கோலி செய்த சாதனைகளுக்காக அவர் தலை நிமிர்ந்து பெருமையுடன் நடக்கலாம்”

என கூறியுள்ள அவர் சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறக்கூடிய அணியாக இருந்த இந்தியாவை வெளிநாடுகளிலும் வெற்றி பெறும் அணியாக மாற்றிய பெருமை விராட் கோலியை சேரும் என மனதார பாராட்டி உள்ளார். கேப்டனாக 2014இல் பொறுப்பேற்றபோது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை 2016 முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விராட் கோலி வலம் வர வைத்தார்.
அவர் தலைமையில் வெளிநாடுகளில் 36 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இந்தியா அதில் 16 வெற்றிகளை 44.4 என்ற மிகச்சிறப்பான விகிதத்தில் பதிவு செய்துள்ளது. இந்த 16 வெற்றிகள் என்பது இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் ஒரு சாதனையாகும். மேலும் விராட் கோலி தலைமையில் 24 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்ற இந்தியா அதில் வெறும் 5 தொடர்களில் மட்டுமே தோல்வியடைந்தது.

அற்புதமான கேப்டன்:
“ஒரு சர்வதேச அணியில் கேப்டனாகவோ அல்லது பயிற்சியாளராகவோ பொறுப்பு வகிப்பது மிகவும் கடினமாகும். உலகிலேயே ஒரு கிரிக்கெட் அணிக்கு கேப்டன்ஷிப் செய்வது கடினம் என்றால் அது இந்தியாவாகும். ஏனெனில் இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாகும். அங்கு இருக்கும் ஒவ்வொரு ரசிகனும் நல்லதோ கெட்டதோ இந்திய கிரிக்கெட்டை அதிர்ஷ்டமாக பார்ப்பார்கள். அந்த வகையில் விராட் கோலி ஏறக்குறைய 7 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
விராட் கோலி களத்தில் வெறும் அரை மணி நேரம் விளையாடுவதை பார்த்தால் அவர் எந்த அளவுக்கு மிகுந்த ஆர்வத்துடன் இந்தியாவின் வெற்றிக்காக விளையாடுகிறார் என புரிந்து கொள்ள முடியும். அவரின் பதவி விலகும் முடிவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அதன்பின் மற்ற விஷயங்களையும் யோசித்து பார்த்தேன். சொல்லப்போனால் நான் கேப்டனாக இருந்தபோது என்ன நடந்தது என்பதை பற்றி யோசித்து பார்த்தேன். அனேகமாக இன்னும் சில வருடங்கள் நான் கேப்டனாக செயல்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்”
இதையும் படிங்க : ரொம்ப கிட்ட போய்ட்டாரு. சீக்கிரம் டீம்லயும் விளையாடுவாரு – தமிழக வீரரை புகழ்ந்த தினேஷ் கார்த்திக்
என இதுபற்றி மேலும் தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங் தாம் கேப்டனாக ஓய்வு பெற்றபோது மேலும் ஒரு சில வருடங்கள் கேப்டனாக செயல்பட விரும்பியதாகவும் அதே போன்றதொரு நிலைமையில்தான் விராட் கோலியும் விடை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும் களத்தில் விராட்கோலி எந்த அளவுக்கு இந்தியாவின் வெற்றிக்காக பாடுபடுவார் என்பதை வெறும் அரை மணி நேரத்தில் கணக்கிடலாம் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் கேப்டன்ஷிப் என்பதை தாண்டி பல அம்சங்கள் இருப்பதால் அதில் கவனம் செலுத்த விராட் கோலி எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்பதாகவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.



