இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஆனது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 78 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை குவித்தது. கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இங்கிலாந்து அணி இந்த போட்டியில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணியின் கேப்டன் கோலி, புஜாரா, ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்த போட்டி குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஆண்டர்சன் பல்வேறு அதிரடியான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

கடந்த போட்டியில் ஏற்பட்ட கவனச்சிதறல் மூலம் நாங்கள் தோற்றம். இதனால் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கவனச்சிதறல் எங்கும் இருக்க கூடாது என்று முடிவு செய்தோம். அதன்படி இந்திய அணியின் சீண்டலை கண்டு கொள்ளாமல் எங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்தோம். அதன்படி இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியை நிலைகுலைய திட்டமிட்டோம். முடிவில் இந்திய அணியை வீழ்த்தியது எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் :

கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது மிகச் சிறப்பான தருணம். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் நேருக்கு நேர் எதிர் கொண்டு இருக்கிறோம். அவர் திறமையான வீரர் அவரைக் கொஞ்சம் விட்டாலும் எங்கள் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி ரன் குவிக்க துவங்குவார் என்பதை தெரிந்து கொண்ட நாங்கள் அவருக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த விரும்பினோம். அதன்படி இந்த போட்டியில் நான் கோலியை வீழ்த்தியது சிறப்பானது என்று ஆண்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



