இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைய, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் இன்னும் சில மணி நேரங்களில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலாவது அஷ்வின் இடம் பெறுவாரா ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
ஏனெனில் முதல் 2 போட்டிகளிலும் ஆடும் பிளேயிங் லெவனில் அஷ்வின் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது அஸ்வின் விளையாடுவாரா ? என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஏனெனில் இந்தப் போட்டிக்கு முன்னதாக நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி இந்திய அணியின் இன்றைய மாற்றம் குறித்து பேசியபோது :

வெற்றிபெற்ற அணியை ஏன் மாற்ற வேண்டும். அப்படி ஒரு அவசியம் இந்திய அணிக்கு வரவில்லை. வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது வேறு ஏதாவது காம்பினேஷன் தேவைப்பட்டாலோ அணியில் மாற்றம் செய்யலாம் மற்றபடி எதற்காக அணியின் காம்பினேஷனை மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக நிச்சயம் இந்த மூன்றாவது போட்டியிலும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி மாற்றமில்லாமல் விளையாடும் என்றும் தெரிவிகிறது. அதனால் இன்றும் அஸ்வின் சேர்க்கப்பட மாட்டார் என்பதை கோலி மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும் லீட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதனால் டாசிற்கு முன்னர் கோலி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.



