இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் துவக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பின்னர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் 83 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 248 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 127 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் தொடக்க வீரரான கே எல் ராகுல் வரலாற்று சாதனை ஒன்றினை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதற்கு முன்னர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு துவக்க வீரர்கள் மட்டுமே இந்திய அணி சார்பாக சதம் விளாசி உள்ளனர்.

1952ஆம் ஆண்டு வினோ மன்கட் என்பவரும், 1990இல் ரவி சாஸ்திரியும் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்துள்ளனர். அவர்களைத் தவிர தற்போது 3-வது வீரராக கேஎல் ராகுல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த வீரர் ஆக இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசியக் கண்டத்திற்கு வெளியே அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையிலும் தற்போது ராகுல் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஆசியக் கண்டத்திற்கு வெளியே இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன கவாஸ்கர் 15 சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் இருந்த சேவாக் 4 சதத்தோடு தற்போது ராகுலும் 4 சதம் அடித்து இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ராகுல் 127 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கும் இவ்வேளையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நிச்சயம் அவர் இரட்டை சதம் அடிக்கவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.



