இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இன்று மதியம் 3.30 மணி அளவில் துவங்க இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்களது பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. அதேவேளையில் முதலாவது போட்டியில் ஏற்பட்ட சில சறுக்கல்களை சரிசெய்துகொண்டு இங்கிலாந்து அணியும் பலமாக திரும்பும் என்பதால் இந்த இரண்டாவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய அணியிலும் இங்கிலாந்து அணியிலும் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பேட்டி ஒன்றினை அளித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் இந்திய வீரர் ஒருவர் நிச்சயம் இந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களாகவே சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். பலமுறை அவர் அரைசதம் கடந்தாலும் சதம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இந்த போட்டியில் நிச்சயம் விராட் கோலி சதம் அடித்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனெனில் லார்ட்ஸ் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் எப்போது விளையாடும்போதும் ஒரு நம்பிக்கை பிறக்கும். அந்த வகையில் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வரும் கோலி இம்முறை சதத்தை விளாசுவார் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.
இந்திய அணி சார்பாக ஷர்துல் தாகூர் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக இசாந்த் ஷர்மாவோ அல்லது ரவிச்சந்திரன் அஸ்வினோ விளையாட வாய்ப்பு உள்ளது என்றும் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டூவர்ட் பிராட்க்கு பதிலாக மொயின் அலி விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.



