கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது நேற்றுடன் முடிவிற்க்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் சாம்பியனஷிப் கோப்பையை கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி. மழையின் காரணமாக இந்தப் போட்டியானது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படவே, எந்த அணியும் வெற்றி பெறாமல் ட்ராவில் தான் முடிவுபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், தங்ஙளது அற்புதமான திறமையை வெளிக்காட்டி இந்த போட்டியின் விதியையே நேற்று மாற்றி எழுதிவிட்டனர் என்றே சொல்லலாம்.

கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியை 170 ரன்களுக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சுருட்ட, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நான்காவது இன்னிங்சை தொடங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டாம் லதாம் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் விரைவிலேய தங்களது விக்கெட்டை இழந்தாலும், அடுத்து வந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகிய இருவரும் பொறுப்பாக ஆடி அந்த அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த போட்டி முடிந்ததும் பேட்டியளித்திருக்கும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி ஐசிசிக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் பேசிய அவர் கூறியதாவது, எதிர்காலத்தில் டெஸ்ட் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டியை குறைந்தது மூன்று போட்டிகளாக மாற்ற வேண்டும். அப்படி இருந்தால்தான் டெஸ்ட் போட்டியில் ஒரு அணியின் தன்மை என்னவென்று நம்மால் சோதிக்க முடியும் என்று கூறிய அவர், இது தான் உண்மையில் டெஸ்ட் சாம்பியன் யார் என்பதை கண்டறிய சிறந்த வழியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த போட்டியை எளிதாக ட்ரா செய்திருக்க முடியும் என்ற நிலையில் இருந்தும், இந்திய அணியானது தோல்வியை சந்தித்திருப்பது இந்திய அணியின் ரசிகர்களை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் விராட் கோஹ்லி சரியான ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் விராட் கோஹ்லியின்மீது தங்களது கோபத்தை அவர்கள் காட்டி வருகின்றனர்.

எப்போதுமே தான் தேர்ந்தெடுத்த அணிதான் சிறந்த அணி என்று விளக்கம் கூறும் கோஹ்லி, அந்த பேட்டியில் மீண்டும் அதே கருத்தை கூறியுள்ளார். நீண்ட பேட்டிங் வரிசை வேண்டும் என்பதற்காகவே இரு ஸ்பின்னர்களுடன் நாங்கள் களமிறங்கினோம் என்று அணியின் தேர்விற்கு நியாயம் கற்பித்திருக்கும் அவர், ஐசிசி கோப்பையை கைப்பற்ற கிடைத்த மேலும் ஒரு சிறந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையிலாவது சிறந்த அணியை தேர்வு செய்து, ஒரு கேப்டனாக ஐசிசி கோப்பையை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



