சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் ஜாம்பவானாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், தற்போது இந்திய அணியில் தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் ஒருவர் குறித்து தனது கருத்தைக் கூறியுள்ளார். பொதுவாகவே ஒரு வீரரை மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு பேச விரும்பாத சச்சின், அந்த இளம் வீரரும் தன்னைப் போன்ற மனநிலையிலேயே இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பன்ட், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதற்கு முன்பு வரை மோசமான கீப்பிங் மற்றும் பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவர், ஆஸ்திரேலிய தொடரிலிருந்தே இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்றே செல்ல வேண்டும்.
மேலும் அவரின் அற்புதமான பேட்டிங்கை பார்க்கும் அனைவரும் அவரை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்டுடன் ஒப்பிட்டு பேசுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றிர்கு பேட்டியளத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் ரிஷப் பன்ட் பற்றி கூறியிருப்பதாவது, ஒரு வீரரை மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு பேசுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் அவர் அவர்களுக்கான அடையாளங்கள் இருக்கிறது.

ரிஷப் பன்ட் இப்போது மட்டுமல்லாமல் எப்போதும் ரிஷப் பன்ட் என்று தான் அழைக்கப்படுவார். அவர் இரண்டாவது ஆடம் கில்கிறிஸ்ட் அல்ல. அப்படி ஒப்பிடுவதும் தவறான ஒன்றாகும். ஒவ்வொரு வீரரும் தங்களது சொந்த அடையாளத்துடன் இருக்கவே விரும்புகிறார்கள். இதையே தான் ரிஷப் பன்ட்டும் விரும்புகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தனது திறைமைய அதிகப்படுத்திக் கொண்டே வருகிறார். காலப்போக்கில் இதையே அவர் தொடர்ந்து செய்வார் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் மேலும் பேசிய சச்சின், ரிஷப் பன்ட்டும் புஜாராவும் வெவ்வேறு விதமான திறமைகளை உடையவர்கள் என்று அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரிஷப் பன்ட் பயமில்லாமல் விளையாடுகிறார். டெஸ்ட் போட்டிகளிலேயே அவர், மிகப் பெரிய ஷாட்களை விளையாடுகிறார். இதுவே புஜாராவின் ஷாட்கள் வேறுபட்டது. என்னைப் பொறுத்தவரை இந்த இருவரின் அணுகுமுறையும் இந்திய அணிக்கு மிக முக்கியமானது என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரிஷப் பன்ட் மிக முக்கிய வீரராக இருப்பார் என்று இதற்கு முன்னராகவே முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



