இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது வரும் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் குறித்த தகவல்கள் நாள்தோறும் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த இறுதிப் போட்டிக்கான அம்பயர்கள் குறித்து விவரம் வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி உள்ளது.

இந்த இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் மற்றும் மைக்கேல் கோஃப் ஆகிய இருவரும் அம்பயர்களாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெபிரியாக கிறிஸ் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் வெளிநாட்டு அம்பயர்களே நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அம்பயர்கள் நியமிக்கப்பட்டதற்கான காரணத்தையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்கள் கூறுகையில் : வெளிநாட்டில் இருந்து அம்பயர்களை இங்கிலாந்திற்கு கொண்டுவந்தால் அவர்களும் கடுமையான கொரோனா விதிமுறைகள் மூலம் பயோ பபுளில் இருக்க வேண்டும்.

அதனால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கவே இங்கிலாந்தில் உள்ள அம்பயர்களை உபயோகிக்க முடிவு செய்து அவர்களை தனிமைப்படுத்தி பயோ பபுள் விதிமுறைப்படி தங்க வைத்துள்ளோம். எனவே இவர்கள் இருவரே இறுதிப்போட்டிக்கு அம்பயர்களாக செயல்படுவார்கள் என ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து சென்ற இந்திய அணி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சிக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் 53 டெஸ்ட் போட்டிகளிலும், மைக்கல் கோஃப் 19 டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



