கரோனா அச்சுறுத்தல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000 பேரை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 30 பேர் வரை இதற்கு பலியாகி உள்ளனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்றால் சந்தேகம்தான். மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நேரத்தில் கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைதளங்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.
இதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் முதல்தர கிரிக்கெட் ஜாம்பவானான வாசிம் ஜாபர் ஐபிஎல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர். மூன்றாம் வரிசையில் சுரேஷ் ரெய்னாவும், நான்காவது இடத்தில் விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்தாவது வரிசையில் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் உலகின் மிகச்சிறந்த கேப்டனுமான தோனி இருக்கிறார். இவரே விக்கெட் கீப்பிங் பணியையும் செய்வார். ஆல்-ரவுண்டராக அன்ரே ரசல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாபர்.
சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரசித் கான் ஆகிய இருவரும் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மலிங்கா மற்றும் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாபர். 12 வீரராக ஜடேஜா உள்ளார்.

தற்போது உள்ள ஐ.பி.எல் அணிகளை கணக்கில் வைத்து இந்த அணியை வாசிம் ஜாபர் தேர்ந்தெடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் தென்னாபிரிக்க அணியை சேர்ந்த அதிரடி வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ்க்கு இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் அதிரடி வீரரும், 360 டிகிரி வீரருமான டிவில்லியர்ஸ் இந்த பட்டியலில் இல்லது ஆச்சரியமளிக்கிறது என்று ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.



