இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் பல இன்னல்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்திய அணியின் நான்காவது வீரராக களமிறங்கும் ஐயர் 18 போட்டிகளில் 748 ரன்களைக் குவித்து தனது இடத்திற்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்.

மேலும் உலகக் கோப்பை தொடர் மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக நான்காவது இடத்தில் சரியான வீரர் இல்லை என்று தவித்து வந்த இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அந்த இடத்தில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் அந்த இடத்தை உறுதி செய்துள்ளார்.
மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை நியூசிலாந்து மண்ணில் பதிவு செய்தார். ஏற்கனவே பல நபர்கள் நான்காமிடத்தில் சோதனை செய்யப்பட்டாலும் இறுதியில் அந்த இடத்திற்கான வாய்ப்பை கெட்டியாக பிடித்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது தனது கிரிக்கெட் கனவு குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : நான் சிறு வயது முதலே கிரிக்கெட்டை நேசித்து விளையாடி வருகிறேன். அதிலும் குறிப்பாக சிகப்பு பந்து கிரிக்கெட்டை அதாவது டெஸ்ட் கிரிக்கெட் விரும்பி ஆடி வருகிறேன்.
மேலும் ஒரு கிரிக்கெட் வீரராக அவ்வகை போட்டியே நமது திறமையை வெளிப்படுத்த உதவும் எனவே இந்திய அணிக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்து நான் விளையாடுவதே என்னுடைய லட்சியம் என்னுடைய கனவு அதுதான் என்று ஐயர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மட்டுமே தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

மேலும் டி20 அதிரடியாகவும், ஒருநாள் போட்டிகளில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் ஐயர் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது. ஆனால் அவரது இடம் குறித்த தேர்வு குழு தான் முடிவு செய்ய வேண்டும் இருப்பினும் எதிர்காலத்தில் அவர் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத் தக்கது.



