இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் 119 ரன்களையும், கோலி 89 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக ரோஹித்தும், தொடர் நாயகனாக கோலியும் அறிவிக்கப்பட்டனர். இந்திய அணி இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் தற்போது இந்திய அணி வீரர்கள் தங்களது அடுத்த தொடருக்காக தயாராகி கிளம்ப உள்ளனர். ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 24ஆம் தேதி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடர் நடப்பதாலும் விரைவில் அங்கு சென்றடைய வேண்டும் என்பதாலும் இன்றைக்கு நியூசிலாந்து நாட்டிற்கு இந்திய அணியின் பயணம் மேற்கொள்ள உள்ளது.

மேலும் இந்த தொடரின் முதல் போட்டிக்கு இடையே இரண்டு நாட்களே இருப்பதால் இன்று நியூசிலாந்து சென்றால்தான் இரண்டு நாட்கள் பயிற்சிக்கு பிறகு டி20 போட்டியில் பங்கேற்க முடியும் என்பதால் மேட்ச் முடிந்த கையோடு இந்திய அணி வீரர்கள் பேக்கப் செய்து கிளம்பியது குறிப்பிடத்தக்கது.



