ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை ஒன்றாம் தேதி நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாம் பாதியில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி முற்றிலுமாக நடைபெறாமல் போனது.
ஷ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய பார்த்திவ் பட்டேல் :
இந்த முதல் டி20 போட்டியின் போது இந்திய அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 59 ரன்கள் குவித்த வேளையில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இந்திய அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றார். இறுதியில் ஷிவம் துபேவும் 21 பந்துகளில் பந்துகளில் 42 ரன்கள் குவிக்க இந்திய அணி நல்ல ரன் குவிப்பை வழங்கியிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி சூழலுக்கு ஏற்றவாறு இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாட ஷ்ரேயாஸ் ஐயர் தனது பொறுப்பை உணர்ந்து அவருக்கு ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்து கொடுத்தார். டி20 போட்டிகளின் போது துவக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தால் சரியான நேரத்தில் ஒருவர் நங்கூரம் அமைத்து விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் நிகழ்த்த காத்திருக்கும் மாபெரும் சாதனை – விவரம் இதோ
அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாடும் ஒரு வீரருக்கு மற்றொரு வீரர் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்து கொடுத்தால் எதிரில் இருக்கும் வீரர் அதிரடியாக விளையாட முடியும். ஷ்ரேயாஸ் ஐயராலும் அதிரடியாக விலையாட முடியும் என்றாலும் சூழலை கருத்தில் கொண்டு அவர் மைதானத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து விளையாடியது சிறப்பாக இருந்ததாக பார்த்திவ் பட்டேல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



