இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை ஒன்றாம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கும் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்தாவது இந்திய வீரராகவும், உலகளவில் முதல் நபராகவும் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அபிஷேக் சர்மா நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :
அந்தவகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 48 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 191 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1487 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒட்டு மொத்தமாக 98 சிக்ஸர்களையும் அவர் விளாசியுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 2 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்வார். ஏற்கனவே இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகிய நான்கு வீரர்கள் 100 சிக்ஸர்களை அடித்துள்ளனர்.
இவ்வேளையில் சர்வதேச டி20 போட்டியில் 100 சிக்ஸர்களை இந்திய அணி சார்பாக அடித்த 5 ஆவது பேட்ஸ்மேனாக அபிஷேக் சர்மா சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதல் 12 பந்திகளிலேயே 2 சிக்ஸர்களை அடித்தால் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆவாரா? – ஷ்ரேயாஸ் ஐயர் பதில்
இந்த சாதனை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான எவின் லீவிஸ் 100 சிக்ஸர்களை 789 பந்துகளில் அடித்து குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய சர்வதேச வீரர் என்ற சாதனையை வைத்துள்ளார். அவரது இந்த சாதனையை முறியடிக்க அபிஷேக் சர்மாவிற்கு 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.



