இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஒருநாள் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துவிட்டு தற்போது விளையாடி வருகின்றனர்.
அவர்கள் இருவருமே நேரடியாக இடம்பெற தகுதியானவர்கள் : அஷ்வின் கருத்து
அந்த வகையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 40 வயதை எட்டி விடுவார்கள் என்பதனால் அவர்கள் அடுத்த 2027 உலக கோப்பை தொடரில் விளையாடுவார்களா? அல்லது இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி அந்த உலகக் கோப்பை தொடருக்கு பயணிக்குமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது வரை அவர்கள் இருவருமே மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆதரவும் இருந்து வருகிறது. இவ்வேளையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொருத்தவரை நிர்வாகம் அடுத்த ஆண்டு இரண்டு மூத்த வீரர்களையும் பயன்படுத்த விரும்பினால் அவர்களது அனுபவம் நமது அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். மற்றபடி நிர்வாகத்தின் எண்ணம் வேறு விதத்தில் இருந்தால் அவர்கள் பெரிய அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். சமீபத்தில் நடைபெற்ற பல தொடர்களில் அவர்கள் இருவருமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
இதையும் படிங்க : சச்சினை விட சீக்கிரமா வைபவ் சூர்யவன்ஷி புகழ்பெற இதுவே காரணம் – ஜாஸ் பட்லர் கருத்து
என்னை பொறுத்தவரை அவர்கள் இருவரும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் நேரடியாக தகுதிபெற தகுதியுடைய வீரர்கள் தான். அந்த அளவிற்கு அவர்களது ஆட்டம் சிறப்பாக உள்ளது. இருந்தாலும் நிர்வாகம் தான் இது குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டும். அவர்கள் இருவருமே இன்னும் ஒரு உலககோப்பை தொடரில் விளையாட தகுதியான வீரர்கள் தான் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



