ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 16 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனையை நிகழ்த்தினார். ஏற்கனவே 19 வயதுகுட்பட்டோர் இந்திய அணியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு விரைவில் இந்திய முதன்மை தேசிய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி :
அதோடு 15 வயதே நிரம்பிய அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளின் போது எளிதாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷியை காத்திருக்க வைக்காமல் விரைவாக இந்திய அணிக்கு அறிமுகம் செய்யும் ஏற்பாட்டில் தற்போது பி.சி.சி.ஐ களமிறங்கியுள்ளது.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அயர்லாந்து அல்லது இங்கிலாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமானால் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிப்பார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதில் அறிமுகமான வீரராக சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்து வருகிறார். சச்சின் தனது 16-வது வயது 205 ஆவது நாளில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு எல்லாம் ஓகே தான்.. ஆனா ரோஹித் சர்மா கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் – சபா கரீம் எச்சரிக்கை
ஒருவேளை சூர்யவன்ஷி அடுத்த மாதம் அறிமுகமாகும் பட்சத்தில் 15 வயதிலேயே அறிமுகமாகி இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். அதோடு ஒட்டுமொத்தமாக ஷபாலி வர்மா 15 வயது 283 நாட்களில் அறிமுகமாகி இந்திய அளவில் மிக குறைந்த வயதில் அறிமுகமான வீராங்கனை என்ற சாதனையில் உள்ளார். அவரையும் வைபவ் சூர்யவன்ஷி பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



