இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது.
வெற்றிக்கு பிறகு சஞ்சு சாம்சனை பாராட்டிய : சூரியகுமார் யாதவ்
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 40 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 37 ரன்களையும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தங்களது அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 97 ரன்களையும், திலக் வர்மா 27 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியதாவது :
உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி விளையாட வேண்டும் என்றே நாங்கள் நினைத்தோம். இதுவொரு வாழ்வா, சாவா போட்டி, காலிறுதி போட்டி என்றெல்லாம் இல்லாமல் எங்களுடைய வீரர்கள் எவ்வாறு விளையாடுவோம் என்று காண்பித்துள்ளோம். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும். சஞ்சு சாம்சனின் இத்தனை நாள் காத்திருப்புக்கு கிடைத்த பரிசு இது.
இதையும் படிங்க : முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – ரோவ்மன் பவல்
இது அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக நான் பார்க்கிறேன். அவர் அணியில் விளையாடாத போது எவ்வளவு பயிற்சி செய்திருக்கிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய சிறப்பான ஆட்டம் தான் எங்கள் அணிக்கு வெற்றியை பரிசாக கொடுத்துள்ளது என சஞ்சு சாம்சனை பாராட்டி சூரியகுமார் யாதவ் பேசியது குறிப்பிடத்தக்கது.



