இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 2 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசி போட்டி ஜனவரி 18ஆம் தேதி இந்தூரில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு ஹென்றி நிக்கோலஸ் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் வேகத்தில் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்த ஓவரில் டேவோன் கான்வே 5 ரன்களில் ராணா வேகத்தில் அவுட்டானார். அதனால் 5/2 என தடுமாறிய நியூசிலாந்துக்கு அடுத்து வந்த டார்ல் மிட்சேல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நியூஸிலாந்து அசத்தல்:
அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய வில் எங் 30 (41) ரன்களை குவித்து ராணா வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய மிட்சேல் அரை சதத்தை அடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தது.
அப்போதும் ஓயாத அந்த ஜோடியில் கிளன் பிலிப்ஸ் அரை சதமடித்து அதிரடியாக ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து அசத்திய டார்ல் மிட்சேல் மீண்டும் சதமடித்து இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியில் 2வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது கிளன் பிலிப்ஸ் சதத்தை அடித்து ஒரு வழியாக 106 (88) ரன்கள் குவித்து அவுட்டானார்.
மிட்சேல் சாதனை:
அடுத்த ஓவரிலேயே மறுபுறம் இந்தியாவுக்கு பெரிய சவாலைக் கொடுத்த மிட்சேல் 15 பவுண்டரி 3 சிக்சருடன் 137 (131) ரன்கள் விளாசி சிராஜ் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 28* (18), ஜாக் போல்க்ஸ் 10, கிறிஸ்டியன் கிளர்க் 11 (5) ரன்களை எடுத்தனர். அதனால் 50 ஓவரில் நியூசிலாந்து 337/8 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க: 1 விக்கெட் போதும்.. ஜடேஜாவை பற்றி கவலைப்படாதீங்க.. இதனால தோற்ற இந்தியா கம்பேக் தரும்.. சிராஜ்
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இப்போட்டியின் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 2வது அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை மிட்சேல் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஏபி டீ வில்லியர்ஸ்: 5
2. டார்ல் மிட்சேல்: 4*
3. ரிக்கி பாண்டிங்/கிறிஸ் கெய்ல்/குவிண்டன் டீ காக்/ சல்மான் பட்/மர்லான் சாமுவேல்ஸ: தலா 3



