நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது.
மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் போராடி 284/7 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ரோஹித் சர்மா 24 ரன்கள் குவித்து அவுட்டானார்.
ராகுல் அசத்தல்:
மறுபுறம் அசத்திய கேப்டன் சுப்மன் கில் அரை சதமடித்து 56 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 23, ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 118/4 என தடுமாறிய இந்திய அணியை கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்து 112* (92) ரன்கள் குவித்து காப்பாற்றினார்.
அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 27, நிதிஷ் ரெட்டி 20 ரன்கள் அடித்து கை கொடுத்தனர். நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக கிறிஸ்டியன் கிளார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இப்போடியில் 2 பவுண்டரிகளை பறக்க விட்டு நல்ல துவக்கத்தைப் பெற்ற விராட் கோலி 23 (29) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைச் சந்தித்தார்.
கிங் கோலியின் சாதனை:
இருப்பினும் இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் 35 இன்னிங்ஸில் 1773* ரன்களை 55.40 சராசரியில் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் 1999 – 2009 காலகட்டங்களில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 41 இன்னிங்ஸில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1750 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: 118/4 டூ 284/7.. நியூஸிலாந்திடம் சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்திய ராகுல்.. அதிகபட்ச ஸ்கோர் அடித்து அபாரம்
அவருடைய சாதனையை இன்று உடைத்துள்ள விராட் கோலி புதிய ஆல் டைம் சாதனை படைத்துள்ளார். அத்துடன் உலகளவில் ரிக்கி பாண்டிங்கிற்கு (1971) பின் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஒருநாள் ரன்கள் (1773) 2வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். இப்படி சாதனைகளைப் படைத்து வரும் விராட் கோலி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



