இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் எம்எஸ் தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாக போற்றப்படுகிறார். 2011 உலகக் கோப்பைக்கு பின் சீனியர்களை தைரியமாக கழற்றி விட்ட அவர் விராட், ரோஹித், அஸ்வின் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். நாளடைவில் அந்த இளம் வீரர்கள் ஜாம்பவான்களாக உருவெடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர்.
மறுபுறம் இளம் வீரர்களால் வாய்ப்பை இழந்த கௌதம் கம்பீர் போன்ற சீனியர்கள் தங்களது கேரியரின் கடைசி காலத்தை தோனி அழித்ததாக விமர்சித்துள்ளார்கள். இந்நிலையில் தோனி இல்லாமல் போயிருந்தால் இந்திய அணியில் தமக்கு வாய்ப்பே கிடைத்திருக்காது என்று முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி மிஸ்ரா பேசியது பின்வருமாறு.
தோனி இல்லனா:
“நிறைய வீரர்கள் தோனி இருந்திருந்தால் எங்கள் கேரியர் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லக்கூடும். ஆனால் ஒருவேளை தோனி இல்லாமல் இருந்திருந்தால் நான் இந்திய அணியில் இல்லாமலேயே போயிருந்திருக்கலாம் என்பது யாருக்குத் தெரியும். ஏனெனில் அவருடைய தலைமையில் தான் நான் இந்திய அணிக்குள் வந்தேன். அதன் பின்பும் நான் கம்பேக் கொடுத்தேன்”
“என்னை மீண்டும் அணியில் சேர்ப்பதற்கு தோனி சம்மதம் தெரிவித்திருக்கலாம். அதனாலேயே என்னால் மீண்டும் கம்பேக் கொடுக்க முடிந்தது. எனவே நீங்கள் நேர்மறையாக பார்ப்பதற்கான விஷயங்களும் இருக்கின்றன. எனக்கு ஆதரவு கிடைத்தது. பிளேயிங் லெவனில் விளையாடிய போது தோனி என்னிடம் வந்து ஆலோசனைகள் தெரிவிக்கவில்லை என்ற சூழ்நிலைகள் இருந்ததில்லை. அவர் எப்போதும் என்னிடம் ஆலோசனைகளை சொல்வார்”
கேரியரே இல்லை:
“நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய என்னுடைய கடைசி ஒருநாள் தொடரில் தோனி கேப்டனாக இருந்தார். அது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது. நாங்கள் 260 – 270 ரன்கள் அடித்த பின் நான் பந்து வீச வந்தேன். அப்போது ரன்களை கட்டுப்படுத்த முயற்சித்த நான் விக்கெட்டுகளை எடுக்கும் நோக்கத்தில் பந்து வீசவில்லை. சில ஓவர்களுக்குப் பின் என்னிடம் வந்த தோனி நீங்கள் இயற்கையாக பவுலிங் செய்யவில்லை என்று சொன்னார்”
இதையும் படிங்க: இங்கிலாந்தை பாத்து சிரிக்கிறாங்க.. இனிமேல் இந்த 16 வருட அவமானத்தை ஆச்சும் உடைங்க.. வாகன் கோரிக்கை
“எனவே எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்காமல் எப்போதும் போல் பந்து வீசுங்கள் என்றும் தோனி சொன்னார். அவரது வார்த்தைகளைப் பின்பற்றி பந்து வீசிய எனக்கு விக்கெட் கிடைத்தது. அப்போது மீண்டும் வந்த தோனி “இது தான் உங்களுடைய பவுலிங், இதையே வீசுங்கள்” என்று சொன்னார். கடைசியில் அது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. அன்றைய நாளில் 5 விக்கெட்டுகளை எடுத்தது எனது சிறந்த பந்து வீச்சாக அமைந்தது. அன்றைய நாளில் நான் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால் இந்தியா தோற்கும் என்று தோனி கருதினார். இப்படித்தான் எனக்கு அவர் ஆதரவுகளைக் கொடுத்தார்” என்று கூறினார்.



