இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2004 – 2019 வரையிலான காலகட்டங்களில் விளையாடிய அவர் இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்யக்கூடிய அவர் உலகிலேயே அதிக ஸ்டம்பிங்குகளை செய்த கீப்பராக சாதனை படைத்துள்ளார்.
மிடில் ஆர்டரில் விளையாடி 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி உட்பட இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள தோனி சிறந்த ஃபினிஷராகவும் அறியப்படுகிறார். அவருடைய தலைமையில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் (2010இல்) நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார்.
தோனி இந்தியாவில் பிறக்க:
அதே போல விராட் கோலி முதல் அஸ்வின் வரை நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த தோனி இந்திய அணியின் வருங்காலத்தையும் சிறப்பாக கட்டமைத்த பெருமைக்குரியவர். ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தோனியைப் போன்ற மகத்தான வீரர் இந்தியாவில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்று முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பையில் ஃபைனலில் கடைசி ஓவரை அவர் ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக் முடிவு இந்தியாவின் வெற்றியைக் கொடுத்ததாக முரளி விஜய் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட திறமையான தோனி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனி இயற்கையானவர், மிகவும் தனித்துவமானவர். அந்த குணநலன்களை உங்களால் பிரதிபலிக்க முடியாது”
நாம் பெருமைப்படனும்:
“அவர் செய்வதை யாராலும் வந்து செய்ய முடியாது. இந்த விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர் விளையாட்டை எடுத்துச் சென்ற விதம் சிறப்பானது. மிகவும் வலுவான அவர் சிக்ஸர்களை அடிக்கக்கூடிய விதத்தைப் போன்ற வரம்பை வேறு யாரும் வலது கை பேட்ஸ்மேனாக கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கடைசி ஓவரை அவர் ஜோஹிந்தர் சர்மாவிடம் கொடுத்ததால் நாம் வென்றோம்”
இதையும் படிங்க: அவ்ளோ தான் மரியாதை.. கம்பீரை பாத்ததும் பாடி லாங்குவேஜை மாற்றிய கோலி.. இதை கவனிச்சிங்களா?
“அந்த சமயத்தில் சீனியர் ஹர்பஜனுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது என்பது உட்பட நிறைய லாஜிக் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தோனி வித்தியாசமாக சிந்தித்தது நமக்கு கோப்பையைக் கொடுத்தது. எனவே தோனி நமது நாட்டில் பிறந்ததற்காக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார். முன்னதாக 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் சிஎஸ்கே வெல்ல முக்கிய பங்காற்றிய காரணத்தால் முரளி விஜய்க்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.0



