இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் சந்தித்தது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 332 ரன்கள் எடுத்து போராடி தோல்வியை சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் பேட்டிங் துறையில் விராட் கோலி 135, ரோஹித் சர்மா 57, கேப்டன் ராகுல் 60, ஜடேஜா 32 போன்ற சீனியர் வீரர்கள் நல்ல ரன்கள் குவித்து அசத்தினார்கள். ஆனால் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 18, ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.
ருதுராஜ் தவறான இடம்:
குறிப்பாக இந்திய அணிக்குள் சுமார் 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள ருதுராஜ் நன்றாகத் துவங்கியும் தேவால்ட் ப்ரேவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்சால் அவுட்டானார். அதன் காரணமாக அடுத்தப் போட்டியில் கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டு ரிஷப் பண்ட்டை விளையாட வைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தம்முடைய கேரியரில் இதற்கு முன் 4வது இடத்தில் விளையாடாத ருதுராஜை அங்கே விளையாட வைத்தது நிர்வாகத்தின் தவறு என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
எனவே ப்ரேவிஸ் பிடித்த அபாரமான கேட்ச்சால் அவுட்டான ருதுராஜை அதையே சாக்காக வைத்து கழற்றி விடாமல் முழுமையாக 3 போட்டிகளில் வாய்ப்பளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் எப்போதும் 4வது இடத்தில் பேட்டிங் செய்ததில்லை. ஆனால் அவரை அங்கே நீங்கள் அனுப்பினீர்கள்”
கழற்றி விடாதீங்க:
“அங்கே அவர் தேவால்ட் ப்ரேவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்சால் அவுட்டானார். அதைப் பார்த்த நான் என் கையை மடக்கிக்கொண்டு தயவு செய்து அவருக்கு 3 வாய்ப்புகளைக் கொடுங்கள் என்று சொன்னேன். அவரை உடனடியாக நிராகரிக்காதீர்கள். 3 வாய்ப்புகளை கொடுத்த பின்பும் கூட அவரை மதிப்பிடாதீர்கள். அவருடைய முதன்மை வேலை ஓப்பனிங்கில் விளையாடுவதாகும்”
இதையும் படிங்க: கோலியை பாத்து வளந்ர்தேன்.. அதுக்குள்ள முடிக்கலன்னா அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம்.. மார்கோ பேட்டி
“4வது இடத்தை முழுமையாக கொடுக்காத வரை அவருடைய ஒருநாள் கேரியர் பற்றி நீங்கள் தீர்ப்பு வழங்க முடியாது. மிடில் ஆர்டரில் விளையாடி வரும் ரிஷப் பண்ட் 4 அல்லது 5வது இடத்தில் விளையாடுவதற்கு மிகவும் பொருத்தமானவர். இருப்பினும் அவரை நீங்கள் எடுக்கவில்லை. அதை விட்டுவிட்டு நீங்கள் அதற்கு முன் அங்கே விளையாடாத வீரரை அனுப்பியுள்ளீர்கள்” என்று கூறினார்.



