இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தற்போது 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் ஒய்ட்வாஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே போல சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்த தேவையற்ற மாற்றங்களும் தவறான தேர்வுகளும் தோல்விக்கு வித்திட்டது. இந்நிலையில் 2024இல் இந்தியாவுக்கு வருவதற்கு முன் நியூசிலாந்து அணி இலங்கையில் விளையாடியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபரில் பாகிஸ்தானில் விளையாடிய தொடரை தென்னாப்பிரிக்கா 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்து விட்டு இந்தியா வந்ததாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
பிசிசிஐயின் பணத்தாசை:
அப்படி வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் தரமாக தயாராகி வருவதே அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மறுபுறம் பணத்தாசை கொண்ட பிசிசிஐ இந்திய அணியை முழுமையாக தயாராக விடாமல் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாக கவாஸ்கர் விமர்சித்துள்ளார். எனவே தங்களது சொந்த மண்ணில் விளையாடும் சீசனில் இந்திய அணியை வெளிநாட்டுக்கு விளையாட அனுப்பக்கூடாது என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவை பார்த்து பிசிசிஐ மாற வேண்டும் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பார்வையில் பல்வேறு விஷயங்கள் தவறாக செல்லும் சூழ்நிலையில், எதிரணிகளின் தயாராகும் முறைகளை நீங்கள் பாராட்ட வேண்டும். இந்தியாவுக்கு வருவதற்கு முன் இலங்கையில் விளையாடிய நியூஸிலாந்து ஆசிய கண்டத்தின் சூழ்நிலைகள், பிட்ச்களுக்கு பழகிக் கொண்டார்கள்”
கவாஸ்கர் விமர்சனம்:
“தென் ஆப்பிரிக்கா அக்டோபரில் பாகிஸ்தானுக்கு சென்ற விட்டு இந்தியாவுக்கு வந்தது. அவர்களது ஏ அணியும் இந்தியாவும் ஏ அணிக்கு எதிராக விளையாடியது. அதில் அவர்களது சில வீரர்கள் விளையாடினர். அந்த வகையில் அவர்கள் நன்றாகத் தயாராகி இந்தியா வந்தனர். சந்தையின் கோரிக்கை காரணமாக இந்திய அணி வருடம் முழுவதும் விளையாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறது”
“ஏனெனில் அது அவர்களுடைய தொலைக்காட்சி வருமானத்தை அதிகரிக்கிறது. கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா மீண்டும் இந்தாண்டின் நடுவே அந்நாட்டுக்கு விளையாட அனுப்பப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண் சீசனில் வெளிநாடுகளுக்கு சென்று விளையாடுவதில்லை”
இதையும் படிங்க: முதலில் அதை மாத்துங்க.. விராட், ரஹானே, புஜாரா சரியவும் இந்தியா தோற்கவும் அதான் காரணம்.. ஹர்பஜன் சிங்
“அதே போல இந்தியாவும் எங்களுடைய சீசனில் வெளியே வர மாட்டோம், வேண்டுமானால் இங்கே வாருங்கள் என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கு நடுவே நாம் ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியதில் எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை” என்று கூறினார்.



