தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அதனால் 25 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோற்றது. அத்துடன் கௌஹாத்தி போட்டியின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களது மிகப்பெரிய (408 ரன்கள்) தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.
2012 முதல் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டது. ஆனால் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்த இந்தியா தற்போது தென்னாப்பிரிக்காவிடமும் தோற்றுள்ளது. அதனால் தங்களது 93 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்தியா முதல் முறையாக சொந்த மண்ணில் அடுத்தடுத்த வருடங்களில் 2 ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது.
ஒளியாதீங்க கம்பீர்:
அது பற்றி கேட்டதற்கு விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற சீனியர்கள் ஓய்வு பெற்றதால் தற்போதைய இந்திய அணியில் அனுபவமில்லை என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். எனவே கொஞ்சம் நேரம் கொடுத்தால் தற்போதுள்ள புதுமுக வீரர்களைக் கொண்ட அணி வெற்றிகளைக் குவிக்கும் என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார். அதே சமயம் இளம் இந்திய அணி இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ததை மக்கள் மறந்து விடக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போதைய இந்திய அணி புதுமுக வீரர்களால் நிறைந்துள்ளது என்று சொல்லி கௌதம் கம்பீர் ஒளிந்து கொள்ள முடியாது என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். ஏனென்றால் ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் போதுமான அனுபவத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த தோல்விக்கு தவறான திட்டங்கள், ஆல் ரவுண்டர்கள் மீதான அதிகப்படியான ஆசையே காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.
பிரசாத் விமர்சனம்:
இது பற்றி தமது ட்விட்டரில் வெங்கடேஷ் பிரசாத் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அடுத்த தலைமுறையை நோக்கிய மாற்றம் நடப்பதால் இந்த தோல்வி கிடைத்துள்ளது என்று சொல்லி நம்மால் ஒளிந்து கொள்ள முடியாது. ஏனெனில் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, துருவ் ஜுரேல் ஆகியோரைத் தவிர்த்து ஏனைய பெரும்பாலான வீரர்கள் கடந்த 7 – 8 வருடங்களாக அணியில் உள்ளார்கள்”
இதையும் படிங்க: 16.3 ஓவரில் 177 ரன்ஸ்.. ரோகனுடன் சேர்ந்து சயீத் முஸ்தாக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த சாம்சன்
“அவர்களில் சிலர் மிகவும் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ளனர். தந்திரோபாய தவறுகள், ஆல் ரவுண்டர்கள் மீதான ஆசை, தவறுகளிலிருந்து பாடம் கற்க விரும்பாதத்தன்மை ஆகியவைகள் தான் இத்தொடரில் நமக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது. அது சங்கடமானது” என்று பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் தொடர் தோல்விகளால் 2027 சாம்பியன்ஷி புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு கீழே விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



