இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் வகிக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி இன்று நடைபெறுகிறது. அப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தயாராக இருக்கிறது.
முன்னதாக அத்தொடரில் கோல்ட் கோஸ்ட் கராரா மைதானத்தில் நடைபெற்ற 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 119 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பந்து வீச்சுத் துறையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர். 2, 3வது போட்டிகளில் பேட்டிங்கில் முக்கிய ரன்கள் அடித்த அவர் தன்னை நல்ல ஆல் ரவுண்டர் என்பதைக் காண்பித்து வருகிறார்.
சைக்கிள் மட்டுமே தராங்க:
இந்நிலையில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சித்துள்ளார். ஏனெனில் 4வது போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த சுந்தருக்கு 3வது போட்டியில் ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை. இது பற்றி ரமேஷ் பேசியது பின்வருமாறு.
“வாஷிங்டன் சுந்தர் அனைத்து வாகனங்களையும் ஓட்டக்கூடியவர். இருப்பினும் இத்தொடரில் அவருக்கு சைக்கிள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதே இந்திய அணியில் அனைத்து வாகனங்களையும் ஓட்டத் தெரியாத சிலருக்கு பைக் மற்றும் பென்ஸ் கார் ஆகியவற்றை ஓட்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே வாஷிங்டனை இந்திய அணி இன்னும் நன்றாக பயன்படுத்த வேண்டும்”
பேட்டிங் மிரட்டலாக இல்ல:
“கடந்தப் போட்டியில் அவரிடம் பந்தை கொடுக்காத இந்திய அணி பேட்டிங் துறையில் மேலே களமிறக்கியது. அந்த வாய்ப்பிலும் 49* (23) ரன்கள் அடித்த சுந்தர் அபார இன்னிங்ஸ் விளையாடினார். ஒரு வழியாக 4வது போட்டியில் பந்தை கொடுத்த போது சுந்தர் 8 பந்துகளில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்”
இதையும் படிங்க: ஃபைனலுக்கு முன் சச்சின் சார் கொடுத்த.. இந்த ஆலோசனையும் உ.கோ வெல்ல உதவுச்சு.. ஹர்மன்ப்ரீத் பேட்டி
“4வது போட்டியில் இந்திய அணி தங்களுடைய நல்ல பந்து வீச்சால் மட்டுமே வென்றது. டி20 உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நம்மிடம் நல்ல பவுலிங் குழு இருக்கிறது. ஆனால் பேட்டிங் துறை காத்திருந்து பார்ப்போம் என்ற வகையிலேயே இருக்கிறது. இந்திய அணியிடம் மிரட்டலான பேட்டிங் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உலகக் கோப்பைக்கு முன் அது செட்டிலாகிறதா? என்பதைப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.



