ஐசிசி 2025 மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டி அக்டோபர் 30ஆம் தேதி நவிமும்பையில் மதியம் 3:00 மணிக்கு துவங்குகிறது. அதில் வலுவான நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தங்களது சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. ஏற்கனவே 7 முறை உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா இம்முறையும் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில் மகளிர் உலகக் கோப்பைகளில் இந்தியாவை எதிர்கொண்ட 14 போட்டிகளில் ஆஸ்திரேலியா 10 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 2005 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை நடைபெற்ற லீக் சுற்றிலும் இந்தியா நிர்ணயித்த 331 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த ஆஸ்திரேலியா உலக சாதனை வெற்றி பெற்றது.
குறுக்கே மழை வருமா:
மறுபுறம் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 2017 உலகக் கோப்பை செமி ஃபைனலில் ஹர்மன்ப்ரீத் கௌர் 171* ரன்கள் விளாசி கிட்டத்தட்ட தனியாளாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். எனவே இம்முறையும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டுமெனில் இந்தியா அது போன்ற மேஜிக் ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.
அப்படி வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள செமி ஃபைனலில் மழையும் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. ஏனெனில் செமி ஃபைனல் நடைபெறும் நவிமும்பையில் இன்று சராசரியாக 50% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
ரூல்ஸ் என்ன:
இருப்பினும் போட்டி துவங்கும் 3:00 மணிக்கு மேல் 10 – 20% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அதனால் இப்போட்டியில் அவ்வப்போது மழை குறுக்கிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை குறுகிட்டால் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கு நடுவர்கள் முயற்சி செய்வார்கள்.
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: 1992 முதல் 8க்கு 8 தோல்வி.. வரலாற்றை மாற்றி எழுதிய தெ.ஆ.. சரித்திரம் காணாத வெற்றி
அதையும் தாண்டி மழை பெய்தால் போட்டி மீண்டும் அக்டோபர் 31ஆம் தேதி ரிவர்ஸ் நாளில் நடைபெறும். அதையும் தாண்டி மழை பெய்தால் மட்டுமே போட்டி ரத்து செய்யப்படும். ஆனால் அப்படி போட்டி ரத்து செய்யப்பட்டால் ஐசிசி விதிமுறைப்படி புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா ஃபைனலுக்குச் சென்று விடும். 4வது இடத்தைப் பிடித்த இந்தியா வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.



