இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அடுத்ததாக முக்கியமான 2வது போட்டி அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்ட் நகரில் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கேப்டன் சுப்மன் கில் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த விராட் கோலி மீண்டும் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 17/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா நங்கூரமாக விளையாடினார்.
ரோஹித் – ஸ்ரேயாஸ் அசத்தல்:
அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு மெதுவாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 3வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த அந்த ஜோடியில் ரோஹித் சர்மா அரை சதமடித்து 7 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (97) ரன்கள் விளாசி பெவிலியன் திருப்பினார். அவருடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தமது பங்கிற்கு அரை சதத்தை அடித்து 61 (77) ரன்களில் ஜாம்பா சுழலில் போல்டானர்.
அடுத்தாக அப்சர் பட்டேல் அதிரடி காட்டிய நிலையில் எதிர்ப்புறம் கேஎல் ராகுல் 11 ரன்னில் ஜாம்பா சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னில் சேவியர் பார்லட் வேகத்தில் நடையைக் கட்டினார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய அக்சர் பட்டேல் 5 பவுண்டரிகளை பறக்க விட்டு 44 (41) ரன்கள் குவித்து அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டியும் 8 ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.
இந்தியா 264 ரன்ஸ்:
கடைசி நேரத்தில் அர்ஷ்தீப் சிபிக் 13 (14), ஹர்ஷித் ராணா அதிரடியாக 24* (18) எடுத்து கை கொடுத்தனர். அதனால் 50 ஓவரில் இந்தியா 264/9 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் ஸ்டார்க் 2, சேவியர் பார்லெட் 3, ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். முன்னதாக இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்தார்.
இதையும் படிங்க: இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நடந்த தவறு.. கவுதம் கம்பீரை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன?
அதையும் சேர்த்து தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெய்ல் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 92
1. கிறிஸ் கெய்ல் : 92
2. சனாத் ஜெயசூர்யா: 89
3. ஷாஹித் அப்ரிடி: 82



