இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது. தற்சமயத்தில் அவர்கள் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்கள். முன்னதாக விராட், ரோஹித் ஆகியோருக்கு நிகரான மற்றொரு சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
இத்தனைக்கும் கடைசியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களிலும் அசத்திய ஜடேஜாவுக்கு ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது பற்றி கேட்டதற்கு ஆஸ்திரேலியாவில் 2 இடது கை ஸ்பின்னர்கள் தேவையில்லை என்பதால் ஜடேஜாவை தேர்ந்தெடுக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
2027 உலகக் கோப்பையில் ஜடேஜா:
அதன் காரணமாக விராட், ரோஹித் போல 2027 உலகக்கோப்பையில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவதும் சந்தேகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்த உலகக் கோப்பையில் ஜடேஜா விளையாடுவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“2027 பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அந்த பேச்சில் ரவீந்திர ஜடேஜாவை தள்ளுபடி செய்யாதீர்கள். அவரும் அந்த கலவையில் இருப்பார் என்பதில் கேள்வி வேண்டாம். இப்போதும் அவர் 7 – 8 வருடங்களுக்கு முன் இளமையாக இருந்ததைப் போல ஃபீல்டிங் செய்கிறார். அவர் களத்தில் பந்தை துரத்துவதைப் பார்ப்பது கௌரவமானது”
பெஞ்சமின் பட்டன் ஜடேஜா:
“ஆஸ்திரேலியாவில் அக்சர் பட்டேல் இருப்பதாலும் 3 போட்டிகள் மட்டுமே நடப்பதாலும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் உலகக்கோப்பை நடைபெறும் தென்னாபிரிக்காவில் 2 ஸ்பின்னர்கள் விளையாடுவார்கள்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய ரிக்கி பாண்டிங் வயது அதிகரித்தால் இன்னும் அதிகம் அசத்தக்கூடிய ஹாலிவுட் கேரக்டர் பெஞ்சமின் பட்டன் போல ஜடேஜா அசத்துவதாக பாராட்டியுள்ளார். மேலும் ராக்ஸ்டார் ஜடேஜா என்ற ஷேன் வார்னேவின் வார்த்தைகளை அவர் தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும் பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 22 வயதிலேயே தனித்துவமான சாதனையை நிகழ்த்தி பெருமை சேர்த்த நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ
இது பற்றி பாண்டிங். “ஜடேஜாவுக்கு வயதாவது போல் தெரியவில்லை. அவர் நவீன கால பெஞ்சமின் பட்டன். தன்னுடைய கேரியரை துவங்கிய போது அவர் என்னை சில முறை அவுட்டாகினார் என்பது எனக்குத் தெரியும். அவரைப் பற்றி ஆரம்பம் முதலே வார்னே தெரிவித்த கருத்துக்கள் தவறல்ல. ஜடேஜா ஆல் டைம் சிறந்த ஃபீல்டர் என்று சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக அவர் அந்தப் பட்டியலில் மேலே இருப்பார்” என்று கூறினார்.



