இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் செயல்பட்டு வருகிறார். ஒரு வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் கணிசமாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி ரசிகர்களின் நெஞ்சங்களில் இருக்கிறார். இருப்பினும் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றது முதல் பல இந்திய ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் போன்ற திறமையை நிரூபித்த வீரர்களுக்கு அவர் டி20 அணியில் வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் இதுவரை பெரியளவில் அசத்தாக ஹர்ஷித் ராணாவுக்கு அவர் அனைத்து வகையான அணியிலும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் ஒரு வீரர் மற்றும் வர்ணனையாளராக செயல்பட்டது திருப்திகரமாக இருந்ததாக அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
கஷ்டமான வேலை:
ஆனால் தேர்வுக்குழு தலைவராக இருப்பது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் கடினமான வேலை என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் அந்த வேலையில் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அணியை தேர்ந்தெடுப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார். அணியின் நன்மைக்காக சில வீரர்களை கழற்றி விட்டால் ஏராளமான ரசிகர்கள் தம்மை விமர்சிப்பதாகவும் அவர் மறைமுகமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி என்டிடிவியில் அகர்கர் பேசியது பின்வருமாறு. “இதுவரை நான் செய்த வேலைகளில் வர்ணனையாளராக இருந்தது மிகவும் எளிதானது. அந்த வேலையிலும் நீங்கள் மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டும் என்பதால் அவமரியாதையாக எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் நீங்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தும் வரை வர்ணனையாளர் வேலையை எளிதாக முடித்து விட்டு வீட்டுக்குச் செல்லலாம்”
அகர்கர் ஆதங்கம்:
“இந்தியாவுக்காக விளையாடுவது அதிக திருப்தியான வேலையாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள் களமிறங்கும் போது உங்களுக்கு வேலை இருக்கும். வெற்றி, தோல்விக்கு இடையேயான வித்தியாசம் சிறியதாக இருக்கும். வீரராக விளையாடும் போது உங்களது கையில் பந்து அல்லது பேட் இருக்கும். நீங்கள் தவறாக அல்லது சரியாக விளையாடினால் அது உங்களுடைய நிலையை எடுத்துக்காட்டும்”
“ஒரு தேர்வாளராக நீங்கள் 15 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுப்பது மட்டுமே வேலை. ஆனால் நிறைய திறமையான வீரர்கள் இருப்பதால் பல விஷயங்கள் உங்களுடைய கையை மீறிச் செல்லும். அது அதிக அழுத்தம் நிறைந்த பரபரப்பான வேலையாகும். தேர்வாளராக நீங்கள் எடுக்கும் முடிவு ஒரு வீரரின் கேரியரை நல்லதாக அல்லது மோசமாக மாற்றக்கூடியது”
இதையும் படிங்க: வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயது என்பதை ஹைடன் நம்பல.. வர்ணனையில் நடந்த சுவாரசியம் – ரவி சாஸ்திரி பகிர்வு
“தேர்ந்தெடுப்பதற்கு நிறைய வீரர்கள் இருப்பது நல்ல பிரச்சனை. அது போட்டியை உருவாக்கி உயர்தர செயல்பாடுகளைக் கொண்டு வரும். இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டு என்பதால் உங்களுடைய முடிவுகளை மக்கள் விமர்சிப்பார்கள். சமீப காலங்களில் ரசிகர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எடுத்துகாட்டாக ஸ்ரேயாஸ் ஐயருக்காக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் போராடுகிறார்கள். எனவே இந்த வேலையில் வெற்றி பெற வாய்ப்பில்லை” என்று கூறினார்.



