இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு முழு நேர பேட்ஸ்மேனாக ஒருநாள் அணியில் ரோகித் சர்மா விளையாட இருக்கிறார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் 2027 உலக கோப்பை வரை விளையாட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா நிகழ்த்த இருக்கும் வரலாற்று சாதனை :
இதன் காரணமாக எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. தற்போது 38 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா இந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அடுத்தடுத்த தொடர்களில் தேர்வு செய்யப்படுவார் என்பதனால் இந்த ஆஸ்திரேலிய தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
இதன் காரணமாக ரோஹித் சர்மா தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரில் அவர் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடியின் ஆல்டைம் சாதனையை உடைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்தவும் ரோகித் சர்மாவிற்கு பொன்னான வாய்ப்பு கைகளில் காத்திருக்கிறது.
அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமான ரோகித் சர்மா இதுவரை 273 போட்டிகளில் விளையாடி 265 இன்னிங்ஸ்களில் 32 சதம் மற்றும் 58 அரைசதம் என 11,168 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் 273 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 344 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இந்நிலையில் மேலும் அவர் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் 350 சிக்ஸர்களை ஒருநாள் போட்டியில் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். அதோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் பண்ணுங்க : அந்த வெற்றிக்கு அப்றமும் ரோஹித்தை இந்தியா கழற்றி விட்டது நம்ப முடியல.. ஹைடன், ஏபிடி அதிருப்தி
அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு செல்ல ரோகித் சர்மாவிற்கு இன்னும் 8 சிக்ஸர்கள் மட்டுமே தேவை எனவே இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நிச்சயம் ரோஹித் சர்மா அப்ரிடியின் அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு செல்வார் என்பது உறுதி.



