இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார். ஏனெனில் வெறும் 14 வயது மட்டுமே நிரம்பிய அவர் இந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 252 ரன்கள் குவித்துள்ளார்.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த கவுரவம் :
அதிலும் குறிப்பாக மற்ற வீரரகளை காட்டிலும் அதிரடியாக விளையாடும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 206 என்கிற நிலையில் உச்சக்கட்டத்தில் உள்ளது. 14 வயதிலேயே அறிமுகமானது மட்டுமின்றி மிகக் குறைவான பந்துகளிலேயே சதத்தை அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.
இதன் காரணமாக இந்திய அணிக்காக இவர் வெகு விரைவில் அறிமுகமாவார் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. அதோடு இந்திய அண்டர் 19 அணியிலும் அவர் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் முறையாக இந்திய வரலாற்றில் ரஞ்சி தொடரின் துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 2025-26 ரஞ்சி டிராபி தொடருக்கான பீஹார் அணியின் துணை கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக எந்த ஒரு மாநில அணியிலும் இவ்வளவு இளமையான வீரர்களுக்கு எவ்வித பதிவியும் வழங்கப்பட்டது கிடையாது.
இருந்தாலும் மிகவும் இளம் வயது வீரராக இருக்கும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள பீஹார் கிரிக்கெட் சங்கம் அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என்பதனால் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : அது அவங்களுக்கே நல்லா தெரியும்.. விராட் கோலி ரோஹித் சர்மா எதிர்காலம் குறித்து – ரவி சாஸ்திரி பேச்சு
இருந்தாலும் 14 வயதே ஆன சிறுவனால் துணை கேப்டன்சி அழுத்தத்தை தாங்க முடியுமா? அவர் இதனை இவ்வளவு சீக்கிரமாக கற்றுக்கொள்ள வேண்டுமா? என்றெல்லாம் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த துணை கேப்டன் பதவியால் அவரது பேட்டிங் பார்முக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது.



