ஐசிசி மகளிர் உ.கோ: 102/6 டூ 251.. ரிச்சா கோஸ் உலக சாதனை.. தெ.ஆ’வை திருப்பி அடித்த இந்தியா

Richa Gosh IND vs RSA
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையில் அக்டோபர் 9வது தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் இந்தியா – தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதின. மழையால் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஸ்மிரித்தி மந்தனா 23 ரன்னில் அவுட்டானர்.

அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 13 ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய பிரதிகா ராவல் 37 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்டரி கேஸ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் 9 ரன்னில் நடையைக் கட்டிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் தீப்தி சர்மா 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ரிச்சா கோஸ் அபாரம்:

அதனால் 102/6 என சரிந்த இந்தியா 200 ரன்கள் தாண்டுமா என்ற கவலையில் ரசிகர்கள் ஆழந்தனர். அப்போது 8வது இடத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் வீராங்கனை ரிச்சா கோஸ் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அமன்ஜோத் கௌர் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் அடுத்து வந்த ஸ்னே ராணா அதிரடியாக தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தார்.

அவருடைய ஆட்டத்தைப் பார்த்த உற்சாகத்தில் ரிச்சா கோஸ் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியை துவக்கி 53 பந்துகளில் அரை சதம் கடந்தார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் கடைசி 5 ஓவர்களில் தென்னாப்பிரிக்க பவுலர்களை அடித்து நொறுக்கி சதத்தை நெருங்கினார். அப்போது 11 பவுண்டரி 4 சிக்சருடன் 94 (77) ரன்களில் அவுட்டான ரிச்சா கோஸ் சதத்தை நழுவ விட்டு ஏமாற்றத்துடன் சென்றார். அவருடன் இணைந்து விளையாடிய ராணா 6 பவுண்டரியுடன் 33 (24) ரன்கள் எடுத்ததால் 49.5 ஓவரில் இந்தியா 251 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

ரிச்சா உலக சாதனை:

இப்போட்டியின் வாயிலாக மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் (94) அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிச்சா படைத்துள்ளார். இதற்கு முன் 1982 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக பெளஷே கலில்லி 88 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஒரு மகளிர் உலகக் கோப்பையை போட்டியில் 8 அல்லது அதற்கு கீழ் இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் (94) அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் ரிச்சா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீடிப்பார்களா? – சுப்மன் கில் விளக்கம்

இதற்கு முன் இதே உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வீராங்கனை சோலே ட்ரியான் 74 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஒரு மகளிர் உலகக் கோப்பை போட்டியில் 6 விக்கெட்டுகள் விழுந்த பின் அதிக (149) ரன்கள் அடித்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் (146, நேற்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக) சாதனையையும் இந்தியா உடைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சோலே ட்ரியான் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement