இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா 2027 உலகக்கோப்பை வரை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2027ஆம் ஆண்டு 40 வயதில் அவரால் ஃபிட்டாக நல்ல ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். எனவே அவரை இப்போதே கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்துள்ளது.
அந்த முடிவு பெரும்பாலான இந்திய பிரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மாவுக்கு குறைந்தபட்சம் ஆஸ்திரேலியா தொடரில் கேப்டனாக செயல்படும் வாய்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தரமான கேப்டன் ரோஹித்:
மேலும் இளம் வீரராக இருக்கும் கில் இன்னும் 6 – 8 மாதங்கள் ரோஹித் தலைமையில் துணைக் கேப்டனாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டிலும் அணியை தலைமைத் தாங்கும் மற்றொரு பொறுப்பு சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அனுபவமில்லாததால் அது அவருக்கு சவாலாக இருக்கும்”
“எப்படியும் வருங்காலத்தில் ரோஹித்துக்கு பதிலாக கில் கேப்டனாவார். இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் ரெக்கார்ட் சிறப்பாக இருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அவர் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. குறைந்தபட்சம் அவர் ஆஸ்திரேலியாவில் கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைத்தேன்”
ஹர்பஜன் ஆதங்கம்:
“ஏனெனில் இப்போது தான் அவர் சாம்பியன்ஸ் டிராபியையும் இதர சில தொடர்களையும் வென்றார். எனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் இந்திய அணியின் ஒரு தூணாக இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 2027 உலகக்கோப்பை இன்னும் தூரத்தில் இருக்கிறது”
இதையும் படிங்க: இதை செய்தால் தவிர ரோஹித் சர்மாவுக்கு 2027 உ.கோ சான்ஸ் கேரண்டி கிடையாது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
“சுப்மன் கில் இன்னும் 6 – 8 மாதங்கள் கழித்து அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வது நன்றாக இருக்கும். அதற்கு நிறைய நேரம் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாததால் நான் கொஞ்சம் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளேன்” என்று கூறினார். இந்த முடிவால் விராட், ரோஹித் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



