ஆஸி தொடரில் ஜடேஜா கழற்றி விடப்பட்டது ஏன்? பும்ராவை செலக்ட் பண்ணாதது ஏன்? அகர்கர் பேட்டி

Ajit Agarkar 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. 2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.

அதனால் சாதாரண வீரர்களாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதை விட மற்றொரு சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலிய தொடரிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார். கடைசியாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அவர் இந்தியா கோப்பையை வெல்வதற்கு உதவினார்.

- Advertisement -

கழற்றி விடப்பட்ட ஜடேஜா:

அப்படிப்பட்ட அவர் நல்ல ஃபார்மில் இருந்தும் ஆஸ்திரேலிய தொடரில் தேர்ந்தெடுக்கப்படாதது பல ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. அது பற்றி கேட்டதற்கு ஆஸ்திரேலியாவில் 2 இடது கை ஸ்பின்னர்களை விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்பதாலேயே ஜடேஜா தற்காலிகமாக கழற்றி விடப்பட்டதாக அகர்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 2 இடது கை ஸ்பின்னர்களை எடுத்துச் செல்வது சாத்தியமற்றது”

“நல்ல வீரரான ஜடேஜா இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான திட்டத்தில் இருக்கிறார். ஆனால் சில இடங்களுக்கு போட்டி நிலவுகிறது. அதற்காக அவர் போட்டியில் இல்லை என்று அர்த்தமல்ல. துபாய் சூழ்நிலைகளில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்கள் தேவை என்பதால் அவர் சாம்பியன்ஸ் ட்ராபி அணியில் இருந்தார்”

- Advertisement -

பும்ராவுக்கு ஓய்வு:

“இருப்பினும் தற்சமயத்தில் சமநிலையை கையாள்வதற்காக வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் ஆகியோரை தாண்டி ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவையில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் பேட்டிங், பவுலிங் துறையில் அசத்துவதுடன் ஃபீல்டராகவும் அசத்தக்கூடிய ஜடேஜா இப்போதும் ஒருநாள் போட்டிகளுக்கான திட்டத்தில் இருக்கிறார். துரதிஷ்டவசமாக தற்போதைய அணியில் மட்டுமே அவர் இல்லை”

இதையும் படிங்க: தோனிக்கு அப்றம் இதை செஞ்ச ரோஹித்தை.. கழற்றி விட எப்படி மனசு வந்துச்சு? சேவாக் அதிருப்தி

“ஆஸ்திரேலிய டி20 தொடரில் விளையாட உள்ள ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஒருநாள் தொடரில் மட்டும் ஓய்வு கொடுத்துள்ளோம். ஏனெனில் அவருடைய பனிச்சுமையை முடிந்தளவுக்கு நாங்கள் நிர்வகிக்கிறோம். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஓய்வெடுத்த அவர் மீண்டும் ஒன்றரை மாதம் ஓய்வெடுத்தார். அணிக்கு முக்கியமான அவர் அணியின் நன்மைக்காக பயன்படுத்தப்படுகிறார். எனவே முக்கியமான நேரங்களில் பும்ரா விளையாட எப்போதும் தயாராக இருப்பார். காயத்தை தவிர்க்கும் நோக்கத்தில் சிராஜ் உட்பட அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை நாங்கள் நிர்வகிக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement