ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. விரைவில் துவங்கும் 2025 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி புதிய சண்டிகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரதிகா ராவல் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
மந்தனா அசத்தல்:
அடுத்து வந்த ஹர்லின் தியோல் 10, கேப்டன் ஹர்மன்பிரீத் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் அதிரடியாகவே விளையாடிய மந்தனா அரை சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா நிதானமாக விளையாடினார். அதைப் பயன்படுத்தி மறுபுறம் ஆஸ்திரேலியா பவுலர்களை நாலாபுறமும் அடித்த மன்னனா 77 பந்துகளில் சதத்தை அடித்தார்.
தொடர்ந்து அசத்திய மந்தனா 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் 117 (91) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிச்சா கோஸ் தம்முடைய பங்கிற்கு 29 (33) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். லோயர் ஆர்டரில் ராதா யாதவ் 6, அருந்ததி ரெட்டி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
சாதனை ஸ்கோர்:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த தீப்தி சர்மா 40 (53) ரன்னில் அவுட்டானார். கடைசியில் ஸ்னே ராணா அதிரடியாக 3 பவுண்டரியுடன் 24 (18) ரன்கள் எடுத்தார். இறுதியில் 49.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்தியா 292 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் (292) பதிவு செய்து சாதனைப் படைத்தது.
இதையும் படிங்க: விராட் கோலிக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
இதற்கு முன் 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 ரன்கள் அடித்ததே இந்தியாவின் முந்தைய அதிகபட்ச ஸ்கோர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகளவில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. இங்கிலாந்து: 298/8, ஹமில்டன், 2022
2. இந்தியா: 292, புதிய சண்டிகர், 2025*
3. நியூஸிலாந்து: 288/6, வடக்கு சிட்னி, 2012



