இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் விராட், ரோஹித் போன்ற சீனியர்கள் இல்லாத இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் என்று மைக்கேல் வாகன், கிரேம் ஸ்வான் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் ஆரம்பத்திலேயே கணித்தனர். ஆனால் சுப்மன் கில் தலைமையில் அசத்திய இளம் இந்தியா 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
குறிப்பாக கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசாத்தியமான வெற்றியைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடத் துவங்கியுள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து மோசமாக பேட்டிங் செய்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
8வது இடத்தில் இங்கிலாந்து:
அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 54 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா ஐடன் மார்க்ரம் 86 (55) ரன்கள் எடுத்த உதவியுடன் 20.5 ஓவரிலேயே இங்கிலாந்தை அடித்து நொறுக்கி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அந்த படுதோல்வியால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து 8வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில் இந்தியா முதலிடத்தில் ஜொலிக்கிறது.
அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனை ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் “இங்கிலாந்து 8வது இடத்தில் இருக்கிறது. இது கண்டிப்பாக கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மைக்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஐசிசி கண்டிப்பாக இதைப் பார்க்க வேண்டும் மைக்கேல் வாகன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜாபர் பதிலடி:
அதாவது கடந்த காலங்களில் பலமுறை இந்திய அணியை மைக்கேல் வாகன் வெளிப்படையாக கிண்டலடித்துள்ளார். அதற்கு வாஷிம் ஜாபர் தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். சமீபத்திய டெஸ்ட் தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடி இந்தியாவை காப்பாற்றி சதத்தை நெருங்கினார்கள்.
ஆனால் அப்போது இனிமேலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவர்களது சதத்தை தடுக்கும் நோக்கத்தில் போட்டியை முடித்துக் கொள்ள வந்தார். அதற்கு கேப்டன் கில் சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா, சுந்தர் சதத்தை அடித்ததும் இந்தியாவை போட்டியில் முடித்துக்கொண்டது.
இதையும் படிங்க: சுப்மன் கில்லின் இந்த ப்ளஸ் போதும்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவார் – இர்பான் பதான் கருத்து
அப்போது இந்தியா கிரிக்கெட்டை நேர்மையுடன் விளையாடாமல் சொந்த சாதனைக்காக விளையாடியதாக இங்கிலாந்தினர் விமர்சித்தனர். அதற்காகவே தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது இடத்தில் இங்கிலாந்து திணறுவது நேர்மைக்கு எதிரானது என்று மைக்கேல் வாகனுக்கு ஜாஃபர் கிண்டலான பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



