கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு அவர்களுடைய செயல்திறன் மற்றும் குணத்தைப் பொறுத்து புனைப்பெயர்கள் வைக்கப்படுவது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக விராட் கோலியை சீக்கு என்று தோனி உட்பட பலரும் அழைப்பார்கள். அதே போல ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஜம்போ என்ற புனைப்பெயரை கொண்டுள்ளார். அது போல நிறைய வீரர்களுக்கு ரசிகர்கள் தெரிந்திராத பின்னணியைக் கொண்ட புனைப்பெயர்கள் இருக்கிறது.
அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி லாலா என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறார். முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் லாலா என்று அழைப்பது வழக்கமாகும். அதே போன்ற புனைப் பெயரை வைத்து இந்திய வீரர்களும் ஷமியை அழைப்பது வழக்கமாகும்.
விராட் கோலி கொடுத்துருப்பாரு:
இந்நிலையில் லாலா என்று உங்களை அழைக்கப்படுவதற்கான பின்னணி என்ன? என்று ஷமியிடம் செய்தியாளர் கேட்டார். அதற்கு லாலா என்று அழைக்கப்படுவதற்கான காரணம் தமக்கே தெரியவில்லை என்று ஷமி கூறினார். அந்த பெயரை தமக்கு விராட் கோலி வழங்கியிருக்கக்கூடும் என்றும் ஷமி தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கும் அந்தப் பெயர் நிரந்தர புனைப்பெயராக இருக்கிறது என்று தெரியாது. அது விராட் கோலி செய்ததாக இருந்திருக்கலாம். அவர் தான் அது போன்ற வேலைகளை செய்வார். ஒரு நாள் லாலா பெயரின் அர்த்தம் என்ன என்று நானும் சிந்தித்தேன். சாகித் அஃப்ரிடி கூட அதே பெயரைக் கொண்டுள்ளார்”
எனக்கே தெரியல:
“ஆனால் அதனுடைய அர்த்தம் எனக்கு தெரியவில்லை. நான் ஏன் அந்தப் பெயரை கொண்டுள்ளேன்? என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேனா? தங்க நகை வேலை செய்பவர்களை லாலா என்று அழைப்பார்கள். நான் அந்த வேலையும் செய்யவில்லை உடல் பருமனாகவும் இல்லை”
இதையும் படிங்க: கோச், பிளேயர்ஸ் கஷ்டப்படக் கூடாதுன்னு.. கில்லை வெச்சு பிசிசிஐ போடும் பிளான் சரியானது தான்.. பதான் பேட்டி
“ஆனால் அணிக்குள் வரும் போது நீங்கள் ஏதேனும் பெயரை பெறுவீர்கள். அதைப்பற்றி நீங்கள் விவாதிக்க தொடங்கினால் அணியில் உங்களை கிண்டல் செய்வார்கள். எனவே அது அப்படியே இருக்கட்டும்” என்று கூறினார். 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த ஷமி அதன் பின் காயத்திலிருந்து குணமடைந்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல உதவினார். அதைத் தவிர்த்து வாய்ப்பை பெறாத அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.



