இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமூக வலைதளங்களில் முக்கிய பதிவுகளை இடுவது வழக்கமாகும். தற்போது அவர் ரெடிட் சமூக வலைதளப்பக்கத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ரெடிட் இணையத்தில் அவ்வப்போது சச்சின் டெண்டுல்கர் நேரலையில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிளவில் அவர் ரசிகர்களிடம் பேசினார். அப்போது சச்சின் டெண்டுல்கரிடம் நிறைய ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள். அப்போது உங்களுடைய மகன் அர்ஜுன் உண்மையாகவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளாரா? என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.
சச்சின் பதில்கள்:
அதற்கு “ஆம் செய்துள்ளார். நாங்கள் அனைவரும் அவருடைய வாழ்க்கையின் புதிய தருணத்திற்காக உற்சாகத்துடன் இருக்கிறோம்” என்று சச்சின் பதில் கொடுத்தார். மற்றொரு ரசிகர் ஸ்டீவ் பக்னர் குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்ற மிகவும் சுவாரசியமான கேள்வியை எழுப்பினர். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் அம்பயர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
குறிப்பாக 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. அதே போல சச்சின் டெண்டுல்கரை பார்த்தாலே அவர் எதிரணி விக்கெட் கேட்டால் உடனடியாக கையை உயர்த்தி அவுட் வழங்கி விடுவார். அவராலேயே சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 5 – 7 சதங்கள் தவற விட்டிருப்பார் என்றே சொல்லலாம்.
ஆதார் கார்ட் அனுப்பட்டுமா:
அப்படிப்பட்ட ஸ்டீவ் பக்னர் குறித்து சச்சின் டெண்டுல்கர். “நான் பேட்டிங் செய்யும் போது அவருடைய கைகளுக்கு குத்துச்சண்டை கையுறைகளை (பாக்ஸிங் கிளவுஸ்) வழங்குங்கள். அப்போது தான் அவரால் தன்னுடைய விரலை உயர்த்த முடியாது” என்று கலகலப்பான பதிலை கொடுத்தார். அப்படி சச்சின் வரிசையாக நிறைய ரசிகர்களுக்கு பதிலைக் கொடுத்தார்.
இதையும் படிங்க: ஒய்ட் வால்கர் புஜாராவால் தான் அவர் நிறைய ரன்ஸ் அடிச்சாரு.. விராட், ரோஹித்துக்கு குறைஞ்சவர் அல்ல.. அஸ்வின் பாராட்டு
அதைப் பார்த்த ஒரு ரசிகர் போலிகள் நிறைந்த சமூகவலைதளங்களில் இப்படி பேசுவது உண்மையான சச்சின் டெண்டுல்கர் தானா? நிரூபிப்பதற்கு குரல் மெசேஜ் அனுப்புங்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரெடிட் இணையத்தில் தட்டச்சிடும் பக்கத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த சச்சின். “இதற்கு மேலும் உங்களுக்கு என்னை நிரூபிக்க, என்னுடைய ஆதார் அட்டையை அனுப்பட்டுமா?” என்று கலகலப்பாக பதில் கொடுத்துள்ளார்.



