இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் பேட்ஸ்மேன் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2023 வரையிலான காலகட்டங்களில் விளையாடிய அவர் 103 போட்டிகளில் 7195 ரன்கள் எடுத்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா தொடர்களை வெல்ல அவர் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது.
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு நிகராக புஜாராவும் இந்திய டெஸ்ட் அணிக்கு பங்காற்றியுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். குறிப்பாக புஜாரா 3வது இடத்தில் நங்கூரமாக விளையாடியதாலயே 4வது இடத்தில் விராட் கோலி பெரிய ரன்கள் குவித்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர்களுக்கு நிகராக ரசிகர்கள் புஜாராவை பாராட்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புஜாராவின் பங்களிப்பு:
இது பற்றி அஸ்வின் தம்முடைய யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “செட்டேஸ்வர் புஜாரா இந்திய கிரிக்கெட்டுக்கு எங்கே நிற்பார்? அவருடைய பங்களிப்பு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு கொஞ்சமும் குறைந்தது கிடையாது என்று நான் சொல்வேன். அவர்களுடைய பங்களிப்பு குறித்து நிறைய மக்கள் பேசுகிறார்கள்”
“ஆனால் புஜராவுக்கு எந்த கவனமும் கிடைப்பதில்லை. அனைத்து கிரிக்கெட்டர்களுக்கும் கவனம் கிடைப்பதில்லை. அதற்காக அவர்களுடைய பங்களிப்பு குறைவானது என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் நம்பினாலும் இல்லையென்றாலும் புஜாரா 3வது இடத்தில் கொடுத்த பங்களிப்பு தான் விராட் கோலி நிறைய ரன்கள் அடிப்பதற்கு மிகப்பெரிய கருவியாக இருந்தது”
அஸ்வின் பாராட்டு:
“கிரிக்கெட்டை விரும்பும் போது மக்களுக்கு கண்டிப்பாக புஜாரா கொடுத்த பங்களிப்பு தெரியும். நீங்கள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒயிட் வால்கர் என்ற கேரக்டர் இருக்கும். நான் புஜாராவை ஒய்ட் வால்க்கர் கேரக்டராக குறிப்பிடுவேன். அவர் மெதுவாக வந்தாலும் களத்தை விட்டு சென்றதில்லை” என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை வெளியேற்ற முடிவு பண்ணி தான் அந்த ரூல்ஸ்ஸை கொண்டு வந்திருக்காங்க – மனோஜ் திவாரி சாடல்
மொத்தத்தில் 2010 – 2019 தசாப்தத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ராஜங்கம் நடத்த உதவிய விராட், அஸ்வின், புஜாரா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஷமி, இஷாந்த், புவனேஸ்வர் குமார், ரஹானே, உமேஷ் யாதவ் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள். ரவீந்திர ஜடேஜா மட்டுமே சீனியர் வீரராக இடம் பிடித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



