இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் 2007 டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இந்திய அணியில் ஓரளவு நல்ல ஆல் ரவுண்டராக அசத்திய அவர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் 2025 தொடருக்கான வர்ணனையாளர்கள் பட்டியலிலிருந்து பதான் அதிரடியாக நீக்கப்பட்டார்.
நேரலை வர்ணனையில் சில வீரர்களை தனிப்பட்ட முறையில் வீரர்களை விமர்சித்ததாலேயே பிசிசிஐ அவரை வர்ணனையாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கியதாக செய்திகள் தெரிவித்தன. குறிப்பாக சில வீரர்கள் 2 வருடத்திற்கு முன்பிருந்ததை விட மிகவும் மோசமாக விளையாடுவதாக பதான் நேரலையில் விமர்சித்தார். அதனாலேயே பிசிசிஐ அவரை வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கியதாக செய்திகள் தெரிவித்தன.
ரோஹித் பற்றிய உண்மை:
நாளடைவில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை மறைமுகமாக விமர்சித்ததாலேயே பதான் நீக்கப்பட்டதாக ரசிகர்கள் கண்டறிந்தார்கள். குறிப்பாக கடந்த நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் அவமானத் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பேட்டிங்கில் பெரிய ரன்கள் அடிக்காத ரோஹித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார்.
அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரிலும் அரை சதம் கூட அடிக்கத் தவறிய ரோஹித் சர்மா தோல்விகளுக்கு காரணமானார். அதனால் ஒருவேளை கேப்டனாக இல்லாமல் போனால் ரோஹித் பிளேயிங் லெவனில் இருக்க தகுதியற்றவர் என்று பதான் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். அந்த குறிப்பிட்ட விமர்சனமே ஐபிஎல் வர்ணனையாளர் குழுவிலிருந்து பதான் நீக்கப்பட முக்கிய காரணமானது.
நீக்கிய பிசிசிஐ:
இந்நிலையில் ரோஹித் பற்றி உண்மையான விமர்சனங்களை முன்வைத்ததற்காக வர்ணனையாளர் குழுவிலிருந்து தாம் நீக்கப்பட்டதாக இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்ணில் பார்ப்பதைத் தாண்டி என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? என்பதை சொல்வதே வர்ணனையாளர்களின் வேலை என்று நான் நம்புகிறேன்”
“என்ன நடக்கும்? ஏன்? எப்படி நடக்கும்? என்று சொல்வது வர்ணனையாளர்கள் வேலை. அதே போல ஒரு வீரர் அசத்தினால் பாராட்டுவதும், நன்றாக விளையாடவில்லையெனில் விமர்சிப்பதும் வர்ணனையாளர்கள் வேலை. வர்ணனையாளர் வேலை என்பது வீரருக்காக கிடையாது, ரசிகர்களுக்கானது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா சிறந்த பிளேயர்”
இதையும் படிங்க: சுப்மன் கில் அந்த உ.கோ ஜெய்க்க.. விராட், ரோஹித் மாதிரி பிளேயர்ஸ் தேவை.. பிசிசிஐயை எச்சரித்த ரெய்னா
“இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த குறிப்பிட்ட வருடத்தில் அவருடைய பேட்டிங் சராசரி வெறும் 6. எனவே ஒருவேளை ரோகித் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கு இந்திய பிளேயிங் லெவனில் இடம் கிடைத்திருக்காது என்று நாங்கள் சொன்னோம்” எனக் கூறினார். கடைசியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் 5வது போட்டியில் ரோஹித் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



