இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதிலும் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற்றது மறக்க முடியாததாக அமைந்தது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா தோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடரை சமன் செய்து பலரது பாராட்டுகளைப் பெற்றது. அதே போல சுப்மன் கில் 754 ரன்கள் விளாசி பல சாதனைகளைப் புரிந்து இந்திய அணியின் வெற்றியில் பங்காற்றினார். மேலும் வெளிநாட்டுப் போட்டிகளில் பிளேயிங் லெவலில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று தன்னை விமர்சித்தவர்களுக்கும் அவர் பதிலடி கொடுத்தார்.
ரெஸ்ட் எடுக்காத கில்:
இதைத் தொடர்ந்து இந்தியாவில் துலீப் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் வடக்கு மண்டலம் அணிக்காக சுப்மன் கில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக அவர் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் முழுமையாக 5 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் ஓய்வெடுக்காமல் துலீப் கோப்பையில் விளையாட முடிவெடுத்துள்ளது பாராட்டுக்குரியது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே சமயம் முகமது சிராஜ் உள்ளிட்ட பவுலர்களுக்கு துலீப் கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.
கவாஸ்கர் பாராட்டு:
“சுப்மன் கில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக செயல்பட உள்ளது துலீப் கோப்பைத் தொடருக்கு பெரிய வரவேற்பான விஷயமாகும். இந்திய அணியின் கேப்டனாக அவர் இத்தொடரில் விளையாடுவது மற்ற வீரர்களுக்கு சரியான சமிக்கைகளை அனுப்பும். 5 டெஸ்ட் போட்டிகளில் 6 வாரங்கள் விளையாடிய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த சுப்மன் கில் ஒருவேளை ஓய்வு எடுக்க தீர்மானித்திருந்தால் அது புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்”
இதையும் படிங்க: 2011 மாதிரி 2025 உலகக் கோப்பையை வெல்ல இதை செய்ங்க.. இந்திய மகளிரணிக்கு.. யுவ்ராஜ் சிங் அட்வைஸ்
“அதே சமயம் உலக வெப்பமயமாதல் காரணமாக இங்கிலாந்தில் வழக்கத்துக்கு மாறான கோடை காலம் இருந்தது. தொடர் முழுவதும் அவர்கள் வீசிய அயராத பந்து வீச்சு காரணமாக அவர்களுடைய ஆற்றல்கள் செலவழிக்கப்பட்டிருக்கும். அதனால் அவர்கள் துலீப் கோப்பையில் விளையாடாமல் ஓய்வு எடுக்க உள்ளது நல்ல சிந்தனையாகும்” என்று கூறினார்.



