இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோல்வியைச் சந்திக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி நாளில் அனலாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது.
அது போல அத்தொடர் முழுவதுமே நிறைய பரபரப்பான தருணங்கள் அரங்கேறியது. அதில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தோளில் இந்தியாவின் ஆகாஷ் தீப் கைப்போட்டு வழியனுப்பியது சர்ச்சையை உண்டாக்கியது. அதாவது ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியின் 4வது நாளில் பென் டக்கெட் ரிவர்ஸ் ஸ்வீவ்ப் ஷாட்டை அடித்து ஆகாஷ் தீப்பை வெளுத்து வாங்கினார்.
சவால்விட்ட டக்கெட்:
அப்போது ஒரு பந்தை அடித்த பின் “இன்று என்னால் உங்களை அவுட்டாக்க முடியாது” என்று அவர் சவால் விட்டார். அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஆகாஷ் தொடர்ந்து கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்து பென் டக்கெட்டை ரிவர்ஸ் ஸ்வீப் வாயிலாக விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுக்க வைத்து அவரது வழியிலேயே அவுட்டாக்கினார். அப்போது பெவிலியன் நோக்கி நடையைக்கட்டிய அவருடைய தோளில் கைப்போட்ட ஆகாஷ் சில வார்த்தைகளை சொல்லி அனுப்பி வைத்தார்.
அதற்கு ஒருவேளை தாமாக இருந்திருந்தால் ஆகாஷ் முகத்தில் குத்து விட்டிருப்பேன் என ரிக்கி பாண்டிங், மார்கஸ் ட்ரெஸ்கோதிக் விமர்சித்தார்கள். இந்நிலையில் அந்த சமயத்தில் பென் டக்கெட்டிடம் சொன்ன வார்த்தைகள் பற்றிய ரகசியத்தை ஆகாஷ் பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டக்கெட்டுக்கு எதிராக எனக்கு நல்ல ரெகார்ட் இருக்கிறது. அவரை சில முறை நான் அவுட்டாக்கியுள்ளேன்”
சொன்னது என்ன:
“இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவர் வித்தியாசமானவர் கிடையாது. ஆனால் அன்றைய நாளில் நிறைய அதிரடியான ஷாட்டுகளை அடித்த அவர் என்னுடைய லைன், லென்த்தை பாதிப்படையை வைக்க முயற்சித்தார். அப்போது தான் “இது என்னுடைய நாள், என்னை உங்களால் அவுட்டாக்க முடியாது” என்று அவர் சொன்னார்”
இதையும் படிங்க: ராஜஸ்தான் அணி தான் என் உலகம்.. அவங்க 2 பேர் இல்லனா இவ்ளோ பெரியாளா வந்திருக்க மாட்டேன்.. சாம்சன் பேட்டி
“உண்மையில் பேட்ஸ்மேன்கள் அப்படி நகர்ந்து அடிக்கும் போது உங்களுடைய லைன், லென்த் பாதிக்கப்படும். அதனால் என்ன செய்வதென்று உங்களுக்கு தெரியாது. அது தான் எனக்கும் நடந்தது. அன்று இங்கிலாந்து அதிரடியாக விளையாடியதால் எங்களுக்கு விக்கெட் தேவைப்பட்டது. அப்போது அவரை அவுட்டாக்கிய நான் சிரித்துக்கொண்டே “நீங்கள் தவற விட்டீர்கள், நான் அடித்தேன். எப்போதும் உங்களால் ஜெயிக்க முடியாது. இம்முறை நான் ஜெயித்து விட்டேன்” என்று சொன்னேன். சொல்லப்போனால் அது அதற்கு முன் அவர் என்னிடம் வம்பிழுத்ததன் தொடர்ச்சியாகும். அவை அனைத்தும் போட்டித்தன்மையாகும்” என்று கூறினார்.



