மான்செஸ்டர் நகரில் கடைசியாக நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி சார்பாக இளம் வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக அறிமுகமானார். அப்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அவர் கச்சிதமாக பிடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே அவர் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
அவருக்கு நிர்வாகம் தான் சப்போர்ட் பண்ணனும் : கபில் தேவ் கருத்து
இதன் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டு வேறொரு வீரரை அவரது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஏனெனில் நடைபெற்று முடிந்த நான்காவது போட்டியில் 18 ஓவர்களை வீசிய அவர் 89 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.
அதிலும் குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பந்துவீசிய அவர் இந்த டெஸ்ட் போட்டியின் போது மிகவும் குறைந்த வேகத்தில் வீசியது பலரது மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் கடந்த போட்டியில் அறிமுகமான அவரை உடனடியாக அணியிலிருந்து வெளியேற்றக்கூடாது என்றும் அவரை அணியில் தக்கவைத்து வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு அறிமுக வீரராக அவரிடம் இருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? முதல் போட்டியிலேயே 10 விக்கெட் எடுக்க வேண்டுமா என்ன? ஒரு வீரரின் திறமையை மட்டும் பாருங்கள். என்னைப் பொருத்தவரை அவர் முதல் போட்டியில் செயல்பட்ட விதம் போதுமானது தான். நிச்சயம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை நிர்வாகம் வழங்க வேண்டும்.
அப்போது தான் அவர் வருங்காலத்தில் சிறப்பான வீரராக மாறுவார். எல்லோருக்குமே தாங்கள் விளையாடும் முதல் போட்டியின் போது சற்று பதட்டம் இருக்கும். அந்த வகையில் தான் அவரும் பதட்டம் அடைந்துள்ளார். அதை தவிர்த்து வேறு எந்த விடயமும் அதில் கிடையாது. அவரிடம் பந்துவீச்சில் நல்ல திறமை இருக்கிறது. அதனால் அவருக்கு போதிய அவகாசத்தை கொடுங்கள்.
இதையும் படிங்க : அன்ஷுல் கம்போஜ் அளித்த ஏமாற்றம்.. அர்ஷ்தீப் சிங்கிற்கு கிடைக்கவுள்ள பொன்னான வாய்ப்பு – விவரம் இதோ
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமாகும் ஒரு வீரரிடம் இதுபோன்ற சில தவறுகள் நடைபெறுவது சகஜம்தான். எனவே வருங்காலத்தை கணக்கில் கொண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். நிச்சயமாக தான் செய்யும் தவறுகளில் இருந்து அவர் பாடத்தை கற்றுக் கொள்வார் என கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



