மான்செஸ்டர் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா போராடி டிரா செய்தது. அந்தப் போட்டியில் 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு சுதர்சன், ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 0/2 என சரிந்த இந்தியா கண்டிப்பாக இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
அப்போது ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் 90, கேப்டன் கில் சதத்தை அடித்து 103 ரன்கள் விளாசி இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதை வீணடிக்காமல் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு தொல்லையாக மாறினார்கள். மிகவும் நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கியது.
இந்தியான்னா தொக்கா:
அப்போது இனிமேலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என்று உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று கை கொடுத்தார். இருப்பினும் இந்திய கேப்டன் சுப்மன் கில் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோர் தகுதியான சதங்களை அடித்ததும் இந்தியா ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
ஆனால் அந்த தருணத்தில் இந்தியா கிரிக்கெட்டை நேர்மைத்தன்மையுடன் விளையாடாமல் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் அதே சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் சதத்தை அடிக்காமல் போயிருப்பீர்களா? என்று அந்நாட்டவர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
கம்பீர் பதிலடி:
அத்துடன் இந்தியர்கள் சதத்தை அடித்தால் மட்டும் நேர்மைக்கு புறம்பானது என்று பேசுவது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் என்றாலே இன்னும் தொக்காக நினைக்கும் இங்கிலாந்தினருக்கு கம்பீர் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “ஒருவர் 90 ரன்களிலும் மற்றொருவர் 85 ரன்களிலும் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, அவர்கள் சதத்தை அடிக்க தகுதியானவர்கள் இல்லையா?”
இதையும் படிங்க: டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக 4 இந்திய வீரர்கள் சேர்ந்து நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ
“அவர்கள் வெளியே நடந்திருப்பார்களா? குறிப்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்கள் 90 அல்லது 85 ரன்களில் விளையாடும் போது, தங்களது முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பைப் பெற்றால், நீங்கள் அவர்களை சதமடிக்க அனுமதித்திருக்க மாட்டீர்களா? எனவே இவை அனைத்தும் களத்தில் விளையாடுபவர்களின் முடிவு. அவர்கள் அந்த வழியில் விளையாட விரும்பினால் அது அவர்களுடைய முடிவு. என்னைப் பொறுத்த வரை அந்த இருவரும் சதத்தை அடிக்கத் தகுதியானவர்கள். இறுதியில் அதை அவர்கள் பெற்றார்கள்” என்று கூறினார்.



