இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது திறமையை நிரூபித்து இருந்தார்.
விக்கெட் அதிகளவில் விழாததுக்கு இதுதான் காரணம் : முகமது சிராஜ்
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியில் பும்ராவிற்கு அடுத்து இரண்டாவது முதன்மை பந்து வீச்சாளராக செயல்பட்டு வரும் அவர் இந்த இங்கிலாந்து தொடரிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி பும்ரா இல்லாத வேளையில் இந்திய அணியை பந்துவீச்சு யூனிட்டில் தலைமை தாங்கி வழிநடத்தியும் செல்கிறார்.
அதனால் சமீப காலமாகவே முகமது சிராஜ் இந்திய அணிக்காக முக்கிய பவுலராகவும் மாறியுள்ளார். நடைபெற்று முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வியில் கடைசி விக்கெட்டாக விழுந்த அவர் மைதானத்திலேயே தோல்வியை நினைத்து கண்கலங்கியது அனைவரையும் நெகிழ வைத்திருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 100% உழைப்பை வழங்கி வரும் சிராஜுக்கு அதற்கு ஏற்ற அளவில் விக்கெட்டுகள் விழவில்லை என்ற ஒரு கருத்தும் பரவலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் அந்த கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பேட்டி ஒன்றினை அளித்துள்ள முகமது சிராஜ் கூறுகையில் : நான் ஒரு பந்துவீச்சாளராக எப்போதுமே பந்து வீசுகையில் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் பந்துவீசி வருகிறேன்.
ஒரு போட்டியில் கூட நான் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த நினைக்காமல் பந்துவீசியது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நான் மிகச் சிறப்பாகவே பந்துவீசி வருகிறேன். ஆனால் தற்போது அதிர்ஷ்டம் என் பக்கம் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் விக்கெட்டுகள் அதிகளவில் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தரை பார்த்த முதல் நாளே நான் சொல்லிட்டேன்.. அவர் இதுக்கு தகுதியானவர் – ரவி சாஸ்திரி பாராட்டு
ஆனால் நான் தொடர்ந்து என்னுடைய உழைப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன். அப்படி செய்து கொண்டிருக்கும் போது அதிர்ஷ்டமும் நம் வழியில் வரும் வேளையில் அனைத்தும் மிகச் சிறப்பாக மாறும் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.



